Anbumani strongly condemned: ராமேஸ்வரம் மீனவர்கள் கைதுக்கு அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்

சென்னை: Anbumani Ramadas strongly condemned the arrest of Rameswaram fishermen. ராமேஸ்வரத்தில் 7 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதற்கு பாமக தலைவர் அன்புமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக தலைவரும், எம்பி.,யுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பதிவில், வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 7 பேர் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 3 மீனவர்களை கடந்த 20-ஆம் தேதி சிங்களப் படை கைது செய்தது. அவர்கள் இன்னும் விடுவிக்கப்படாத நிலையில், ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக தமிழக மீனவர்களை கைது செய்து சிங்களப் படை மீண்டும் அத்துமீறலை அரங்கேற்றியிருக்கிறது.

கடந்த ஜூன் மாதம் மீன்பிடி பருவம் தொடங்கிய பிறகு நடைபெறும் பத்தாவது கைது நடவடிக்கை இதுவாகும். இதுவரை மொத்தம் 84 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்காக இந்திய அரசு கண்டிக்காததும், எச்சரிக்காததும் தான் மீண்டும், மீண்டும் அத்துமீறும் துணிச்சலை சிங்கள அரசுக்கு கொடுத்துள்ளது.

தமிழக மீனவர்களை தாக்குவதோ, அத்துமீறி கைது செய்வதோ கூடாது என இலங்கை அரசை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும். ஒரு வாரத்தில் கைது செய்யப்பட்ட 10 மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.