American ship arrives in Chennai: முதன்முறையாக சென்னை வந்துள்ள அமெரிக்க கப்பல்

சென்னை: American ship arrives in Chennai for the first time: சென்னை காட்டுப்பள்ளியில் உள்ள கப்பல்கட்டும் தளத்திற்கு பழுது நீக்குவதற்காக அமெரிக்க கப்பல் வந்துள்ளது.

சென்னை காட்டுப்பள்ளியில் உள்ள எல்&டி கப்பல் கட்டும் தளத்திற்கு அமெரிக்க கடற்படை கப்பல்களுக்கு தளவாட உதவிகள் வழங்கும் சார்லஸ் ட்ரூ கப்பல் பழுது நீக்குவதற்காக வந்துள்ளது. இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவு வளர்ந்து, விரிவடைவதையும் காட்டுவதாக பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய்குமார் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க கப்பலை வரவேற்க பாதுகாப்புச் செயலாளர் டாக்டர் அஜய் குமார், கடற்படைத் துணைத் தலைவர் வைஸ் அட்மிரல் எஸ்.என். கோர்மேட், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் எஸ். வெங்கட் ராமன் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் கப்பல் கட்டும் தளத்திற்குச் சென்றனர்.

இந்த நிகழ்வை இந்திய கப்பல் கட்டும் தொழில் மற்றும் இந்திய-அமெரிக்க பாதுகாப்பு உறவுகளுக்கான சிவப்பு கடிதம் என்று குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு செயலாளர் அஜய் குமார், இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து வகையான அதிநவீன கப்பல்களையும் தயாரிக்கும் திறன் கொண்ட 2 பில்லியன் டாலர் வருவாய் கொண்ட 6 பெரிய கப்பல் கட்டும் தளங்கள் உள்ளன. சமீபத்தில் நாட்டின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான விக்ராந்த், கடற்பணிக்கு சேர்க்கப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்க கடற்படைக்காக சமீபத்தில் எல் & டி நிறுவனம் புதிய கப்பலை வழங்கி்யதாகத் தெரிவித்தார். அமெரிக்க கடற்படை கப்பல் தமிழகத்திற்கு வந்துள்ளது, இந்தியா – அமெரிக்கா இடையே உள்ள நெருங்கிய உறவு வளர்ந்து வருவதையும், விரிவடைவதையும் காட்டுவதாகக் கூறிய அவர், எதிர்காலத்தில் நிறைய வெளிநாட்டு கப்பல்கள் வரும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

உலகளாவிய கப்பல் பழுதுபார்க்கும் சந்தையில் இந்திய கப்பல் கட்டும் தளங்கள் மேம்பட்ட கடல்சார் தொழில்நுட்ப தளங்களைப் பயன்படுத்தி பரந்த அளவிலான மற்றும் செலவு குறைந்த கப்பல் பழுது மற்றும் பராமரிப்பு சேவைகளை வழங்குகின்றன.

கடந்த 2015-16ம் ஆண்டில் சுமார் ரூ.1,500 கோடியாக இருந்த ஏற்றுமதி, தற்போது 800 சதவீதம் அதிகரித்து சுமார் ரூ.13,000 கோடியாக உயர்ந்துள்ளது. இந்திய ஏற்றுமதிக்கான முக்கிய இலக்கு அமெரிக்காவாகும். இரு நாடுகள் இடையான பாதுகாப்பு ஏற்றுமதி வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

ஏப்ரல் மாதம், அமெரிக்க-இந்தியா 2+2 மந்திரி பேச்சுவார்த்தையில், அமெரிக்க கடற்படை கப்பல்களில் பழுதுபார்ப்பதற்காக இந்திய கப்பல் கட்டும் தளங்களை நாடும் விருப்பத்தை உறுதிப்படுத்தினர். அதன்படி இந்தோ பசிபிக் பகுதியின் கப்பல் துறையின் மேம்பாட்டை வலுப்படுத்துவோம் என்று அமெரிக்காவின் இந்தியத் தூதர் மைக்கேல் பேக்கர் கூறினார்.