Agaya Ganga Falls: கொல்லிமலை ஆகாய கங்கை அருவியில் குளிக்கத் தடை

நாமக்கல்: Bathing in Agaya Ganga Falls is prohibited. கொல்லிமலையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆகாய கங்கை அருவியில் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டடுள்ளது.

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றான, நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லிமலை, இயற்கை சூழல் சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. இங்கு விடுமுறை நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கடல் மட்டத்தில் இருந்து 1,330 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த மலையில் 70 கொண்டை ஊசிவளைவுகளை மோட்டார் சைக்கிள், கார் மற்றும் வாகனங்களில் கடந்து செல்வதே ஒரு திரில்லான அனுபவமாக இருக்கும்.

இங்கு ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, நம்ம அருவி, மாசில அருவி உள்ளிட்ட நீர் வீழ்ச்சிகளும், கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி சிலை, அறப்பளீஸ்வரர் கோயில், கொல்லிப்பாவை எட்டுக்கை அம்மன் கோயில், பெரியசாமி கோயில், பொட்டானிக்கல் கார்டன், தோட்டக்கலை பண்ணை, மூலிகை பண்ணை, போட் ஹவுஸ், வியூ பாயிண்ட் உள்ளிட்டவையும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாகும். இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் சோளக்காட்டில் நடைபெறும் சந்தையில் கொல்லிமலையில் விளையும் கிராம்பு, ஏலக்காய் உள்ளிட்ட நறுமணப் பொருட்களையும், மலை வாழைப்பழங்களையும் வாங்கிச் செல்வது வழக்கம்.

கொல்லிமலையில் உள்ள, சுமார் 300 அடி உயரத்திலிருந்து வெள்ளியை உருக்கி விட்டதுபோல் தண்ணீர் விழும் ஆகாய கங்கை அருவியைக் காணவும் குளிக்கவும் செங்குத்தான படிகளைக் கடந்து இளைஞர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்வது வழக்கம். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவி பகுதிக்குச் செல்ல நபர் ஒருவருக்கு ரூ.30 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக கொல்லிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், ஆகாய கங்கை அருவியில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும், வனத்துறையினர் தடை விதிப்பதும் வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில் தற்போது, வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாலும், பருவமழையாலும், பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.கொல்லிமலையில் பெய்து வரும் கன மழையால் அங்குள்ள ஆகாய கங்கை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் கொட்டுவதால், அருவி பகுதிக்குச் செல்லவும், குளிக்கவும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் சனி, ஞாயிறு விடுமுறையை கொண்டாட கொல்லிமலை வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.