Additional centers for NEET exam: நீட் தேர்வுக்கு கூடுதல் தேர்வு மையங்கள்: அன்புமணி

சென்னை: Anbumani Ramadoss said that additional examination centers should be established for the NEET examination for postgraduate medical studies. முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்கு கூடுதல் தேர்வு மையங்களை ஏற்படுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக தலைவரும், எம்பியுமான அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், முதுநிலை மருத்துவப் படிப்புக்காக மார்ச் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்காக தமிழ்நாடு மற்றும் புதுவையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்கள் நிரம்பி விட்டன. கடந்த சில நாட்களாக விண்ணப்பிக்கும் தமிழர்களுக்கு சொந்த மாநிலத்தில் தேர்வு மையங்கள் மறுக்கப்படுகின்றன.

நீட் (பி.ஜி) விண்ணப்பம் கடந்த 7-ஆம் தேதி தொடங்கப்பட்டாலும் கூட, அதற்கான தகுதிகள் 13-ஆம் தேதி தளர்த்தப்பட்டதால், அதன் பிறகு தான் தமிழ்நாட்டை சேர்ந்த மருத்துவர்கள் அதிகம் விண்ணப்பித்தனர். வாய்ப்பு மறுக்கப்படுவதால் அவர்கள் வெளிமாநிலங்களில் நீட் எழுதும் நிலை உருவாகியுள்ளது.

வெகுதொலைவு பயணித்து தேர்வு எழுதுவது மன உளைச்சலை ஏற்படுத்தும். அது தேர்வு செயல்பாட்டை பாதிக்கும். தமிழ்நாடு, புதுவையில் அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ள நிலையில், இந்த இரு மாநிலங்களிலும் அதிக தேர்வு மையங்களை தேசிய தேர்வு முகமை அமைத்திருக்க வேண்டும்.

தேர்வு முகமை செய்த தவறால் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது. எனவே, தமிழ்நாடு – புதுச்சேரியில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்கு கூடுதல் தேர்வு மையங்களை ஏற்படுத்த வேண்டும். அதன் விவரங்கள் ஆன்லைன் விண்ணப்ப தளத்தில் பிரதிபலிப்பதை தேர்வு முகமை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே நேற்று வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்கள் 12 ஆயிரம் பேருக்கு இந்த ஆண்டும் பொங்கல் போனஸ் வழங்கப்படவில்லை. 11 ஆண்டுகளாக பணியாற்றி வரும் அவர்களுக்கு பொங்கல் போனஸ் மறுக்கப்படுவது எந்த வகையிலும் நியாயமற்றது.
பகுதி நேர ஆசிரியர்கள் மிகக்குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் அவர்களின் குடும்பச் செலவுகளுக்கே போதாது எனும் நிலையில், பொங்கல் திருநாளைக் கொண்டாட அவர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது தான் நியாயமாகும்.
பகுதி நேர ஆசிரியர்களின் நிலைமையை உணர்ந்து அவர்கள் அனைவருக்கும் பொங்கல் போனஸ் வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பணி நிலைப்பு செய்யவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.