அமைச்சர்கள் சாலையில் நடமாட முடியாது… மன்னார்குடி ஜீயர் பேச்சு தவறானது: ஆதினங்கள்

அமைச்சர்கள் சாலையில் நடமாட முடியாது… மன்னார்குடி ஜீயர் பேச்சு தவறானது
அமைச்சர்கள் சாலையில் நடமாட முடியாது… மன்னார்குடி ஜீயர் பேச்சு தவறானது

அமைச்சர்கள் சாலையில் நடமாட முடியாது என்ற பேச்சை மன்னார்குடி ஜீயர் தவிர்த்திருக்க வேண்டும் என ஆதினங்கள் தெரிவித்துள்ளனர்.

தருமபுரம் ஆதீனத்தில் மே 22-ல் நடைபெற உள்ள பட்டினப் பிரவேசத்தில், ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச்சென்று வீதியுலா வர, தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தடையை மீறி பல்லக்கு தூக்குவோம் என ஒருதரப்பினரும், தடை விதித்தது சரி என்று மற்றொரு தரப்பினரும் கூறி வருகின்றனர். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுப்பார் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மயிலாடுதுறை தருமை ஆதீனம் தம்பிரான் சுவாமிகள், மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமி, கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் உள்ளிட்டோர் நேற்று சந்தித்தனர்.

திமுக அரசின் ஓராண்டு நிறைவுக்கு வாழ்த்து தெரிவித்த ஆதினங்கள், பல்லக்கு தூக்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆதினங்கள், பட்டணப் பிரவேசத்துக்கு அனுமதி தரும்படி முதல்வரிடன் கோரியுள்ளோம். அனைவரிடமும் கலந்து ஆலோசித்து முடிவு செய்வதாக முதல்வர் கூறியுள்ளார்.

பட்டணப் பிரவேசத்தை சுமுகமாக நடத்த அரசு ஆவண செய்யும் என நம்புகிறோம். பட்டணப் பிரவேச நிகழ்ச்சியில் அரசியலை கலக்க வேண்டிய அவசியமில்லை. இது சமயம் தொடர்பான நிகழ்வு என்றனர். அப்போது, அமைச்சர்கள் யாரும் சாலையில் நடமாட முடியாது என்று மன்னார்குடி ஜீயர் பேசியிருப்பது தொடர்பான கேள்விக்கு, அத்தகைய பேச்சை தவிர்த்திருக்கலாம். அதிகப்படியாக பேசிவிட்டார். அப்படி பேசி இருக்கக்கூடாது. இத்தகைய பேச்சு தவிர்க்கக் கூடிய ஒன்று’ என தெரிவித்தனர்.

இதையும் படிங்க: Firing reported in Delhi: டெல்லி துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் படுகாயம்