fire at oil Godown: எண்ணெய் குடோனில் பயங்கர தீ விபத்து: சிக்கிய 3 டேங்கர் லாரிகள்

சென்னை: A terrible fire broke out in an oil godown in Vanagaram, Chennai.: சென்னை வானகரத்தில் உள்ள எண்ணெய் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

சென்னை மதுரவாயலை அருகே வானகரம் சர்வீஸ் சாலையில் தனியார் எண்ணெய் குடோன் உள்ளது. இந்த குடோனுக்கு அருகிலேயே வீட்டு உபயோகப் பொருட்கள், டைல்ஸ் உள்ளிட்ட சில குடோன்கள் உள்ளன.

இந்நிலையில் நேற்றிரவு எண்ணெய் குடோனில் திடீரென தீப்பிடித்தது. இதனையடுத்து அருகிலிருந்த 6 குடோன்களுக்கும் தீ பரவியது. இந்த குடோன்களில் வட மாநில தொழிலாளர்கள் தங்கியிருந்து வேலை பார்த்து வந்த நிலையில், அவர்கள் அங்கிருந்து அலறியடித்து தப்பியோடினர். இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை.

தீவிபத்து குறித்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்வப இடம் விரைந்த மதுரவாயல், பூந்தமல்லி, விருகம்பாக்கம், கீழ்ப்பாக்கம், எழும்பூர், கே.கே.நகர், ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு தீயணைப்பு நிலையங்களிலிருந்து 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எண்ணெய் குடோன் அருகே எண்ணெயுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 டேங்கர் லாரிகளிலும் தீப்பற்றியதால் கொழுந்து விட்டு எரிந்தன. அருகிலிருந்த பர்னிச்சர், டைல்ஸ் குடோன்களிலும் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் கரும்புகையால் சூழ்ந்தது. இந்த கரும் புகையால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மூச்சுத் திணறல், சுவாசப் பிரச்சனையால் திணறி வருகின்றனர்.

இதனிடையே தீ விபத்து நடந்த பகுதிக்கு அருகில் வசிக்கும் பொதுமக்களை போலீசார் அங்கிருந்து வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளானார்கள். மேலும், எண்ணெய் குடோனில் ஏற்பட்ட தீயை கடும் சவாலுக்கு பின்னர் ரசாயண திரவத்தை கொண்டு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்த தீ விபத்தில் பல கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாயின. எண்ணெய் குடோனில் ஏற்பட்ட தீவிபத்து பின்னர் மற்ற இடங்களுக்கும் பரவியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. தீ விபத்துக்கான காரணம் குறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.