A new type of fever is spreading in Trichy: திருச்சியில் பரவி வரும் புதிய வகை காய்ச்சல்

திருச்சி: A new type of fever is spreading in Trichy. திருச்சி மாவட்டத்தில் அச்சுறுத்தும் வகையில் புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது.

திருச்சி அரசு மருத்துவமனைக்கு காய்ச்சல் காரணமாக குழந்தைகள், பெரியவர்கள் என நாள்தோறும், 70 பேர் வருகின்றனர். இவர்கள் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்றுச் செல்லும் நிலையில், குழந்தைகள் உட்பட 50 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், திருச்சியில் ‘டைப்பஸ்’ என்கின்ற ஒரு புதுவகை காய்ச்சல் பரவி வருவதாகவும், இதன் ஆரம்ப கட்டத்திலேயே கவனித்து சிகிச்சை அளிக்காவிட்டால் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும்’ என்றும் திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர் நேரு எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர் நேரு கூறுகையில், திருச்சி அரசு மருத்துவமனையில் இதுவரை 73 பேருக்கு எலிசா சோதனை மேற்கொண்டதில், 5 பேருக்கு புதிய வகை ‘டைப்பஸ்’ நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து 5 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ‘ஒரியண்டா சுட்டுகாமொஷி’ என்ற பாக்டீரியாவால் ‘டைப்பஸ்’ என்ற நோய் ஏற்படும். காய்ச்சல், தலைவலி, உடல்சோர்வு ஆகியவை இந்நோயின் அறிகுறிகள் ஆகும். மேலும், அக்குள் உள்ளிட்ட உடலின் மறைவிடங்களில் தடுப்புகள், கொப்புளங்களும் ஏற்படும்.

‘ஸ்கிரிப்ட் டைப்பஸ்’ எனப்படும் இந்த காய்ச்சல், செல்லப்பிராணிகளின் மேல் வளரும் ஒட்டுண்ணியால் எளிதாக பரவும். மேலும், மண் சார்ந்த வேலை பார்ப்பவர்களுக்கு மண்ணில் உள்ள ஒட்டுண்ணிகள் மூலம் இந்த காய்ச்சல் ஏற்படும். செல்லப்பிராணிகளை அதிகம் கொஞ்சுவது; அதிக நேரம் மண்ணில் வேலை பார்ப்பது பெண்கள் என்பதால் அவர்களுக்கு இந்த காய்ச்சல் வர அதிக வாய்ப்பிருக்கிறது.

இந்த நோய் அறிகுறிகள் கண்ட நோயாளிகள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவர்களை அணுகி உரிய சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். மெடிக்கல்லில் நேரடியாக மருந்துகள் வாங்கி உட்கொள்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஆரம்பகட்டத்திலேயே இந்நோயை கண்டறிந்தால் உடனடியாக குணப்படுத்தி விடலாம். அதற்குரிய மருந்துகள் கைவசம் உள்ளன. அசட்டையாக இருந்தால் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும் என அவர் தெரிவித்தார்.