A Drone Camera Chases Criminals: குற்றவாளிகளை அடையாளம் கண்டு துரத்தும் ட்ரோன் கேமரா: காரிமங்கலம் போலீசார் அசத்தல்

காரிமங்கலம்: தமிழகத்தில் முதல் முறையாக குற்ற சம்பவங்களில் ஈடுபடும் (A Drone Camera That Identifies And Chases Criminals) குற்றவாளிகளை கண்காணிப்பதற்கும், அவர்களை பிடிப்பதற்கும் ட்ரோன் கேமரா பயன்படுத்தும் பணியில் ஈடுபடும் காரிமங்கலம் காவல்துறையினர்.

தமிழகத்தில் தினந்தோறும் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், குற்றவாளிகளை கண்காணிப்பதற்கும் அவர்களை பிடிப்பதும் காவல்துறையினருக்கு மிகப்பெரும் சவாலாக இருந்து வருகிறது.

மேலும் கொலை, கொள்ளை, விபத்துக்கள், திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் அடையாளம் காண்பதற்கும் வீடுகள், தெருக்கள், முக்கிய வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என தொடர்ந்து காவல்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர். இதன் மூலம் பல்வேறு குற்ற வழக்குகளில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களை கைது செய்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் வெங்கட்ராமன் மேற்பார்வையில் காவல் உதவி ஆய்வாளர் ஜவகர் குமார் காவல் நிலையத்திற்கு புதிதாக ட்ரோன் கேமராவை வாங்கி காவல் நிலையத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் விபத்துக்கள் மற்றும் குற்ற சம்பவங்கள் நடைபெறும் பகுதிகள் பகல் மற்றும் இரவு நேரங்களிலும் இந்த ட்ரோன் கேமரா மூலம் அனைத்து பகுதிகளையும் கண்காணித்து வருகின்றனர்.

தமிழகத்தில் முதல்முறையாக காவல் நிலையத்திற்கு என்று ட்ரோன் கேமராவை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். காவல் நிலையத்தில் இருந்தபடியே ஏழு கிலோமீட்டர் தொலைவு வரை நடைபெறும் போக்குவரத்து நெரிசல்களையும் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறும் விபத்துகளையும் கண்காணித்து உடனடியாக அப்பகுதிக்கு சென்று விரைவான மீட்ப பணிகளிலும் ஈடுபடுகின்றனர்.

மேலும் இந்த அதிநவீன ட்ரோன் கேமராவில் சிறப்பம்சமாக குற்றவாளிகளை இனம் கண்டு அவர்களை மார்க் செய்து விட்டால் தொடர்ந்து அவர்களை மட்டுமே கண்காணிக்கும் திறன் கொண்டது. இதன் மூலம் குற்றவாளிகள் எப்படிப்பட்ட ஒரு மறைவான இடத்தில் சென்று மறைந்து கொண்டாலும் அவர்களையே சுற்றி அப்பகுதியில் நின்றுவிடும் இதனால் காவல்துறையினர் எளிதில் குற்றவாளிகள் எங்கு பதுங்கி இருந்தாலும் கைது செய்ய முடியும். இது காவல்துறையினருக்கு மிகவும் பயனுள்ளதாகவும் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கவும் குற்றவாளிகளை இனம் கண்டு கைது செய்யவும் பயன்படும்.

இது குறித்து காரிமங்கலம் காவல் ஆய்வாளர் வெங்கட்ராமன் கூறும் போது காரிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலை மாலை நேரங்களில் பள்ளி கல்லூரிகள் பேருந்து நிலையம் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளை ட்ரோன் கேமரா மூலம் தினம்தோறும் சில நிமிடங்களிலேயே கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றோம். மக்களுக்காக விரைவாக பணி செய்வதற்காக புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வருவதால் தற்போதைய சூழ்நிலைக்கு மிகவும் முக்கியமானதாகவும் இருக்கும்.

மேலும் கஞ்சா குற்றவாளிகளின் மறைவிடங்களை கண்காணிக்கவும் அவர்கள் பதுங்கும் இடங்களும் விற்பனை செய்யும் இடங்களை காவல்துறையினர் அருகில் செல்லாமலேயே 7 கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும் எங்களால் தற்பொழுது கண்காணிக்க முடிகிறது என்றும் தெரிவித்தார். இது போன்று தமிழகத்தில் உள்ள மற்ற காவல் நிலையங்களிலும் ட்ரோன் கேமரா பயன்படுத்தப்பட்டால் குற்றச்சம்பவங்கள் எளிதில் குறையவும் வாய்ப்புள்ளது.