3D light-sound show extended till September 1st: “விடுதலைப் போரில் வீரத்தமிழகம்” முப்பரிமாண ஒளி-ஒலிக் காட்சி செப். 1ம் தேதி வரை நீட்டிப்பு

சென்னை: “Veerathamizhakam in Liberation War” 3D light-sound show extended till September 1st: தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் “விடுதலைப் போரில் வீரத்தமிழகம்” – என்ற முப்பரிமாண ஒளி-ஒலிக் காட்சி செப்டம்பர் 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் 75வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், இந்திய விடுதலைக்குப் பாடுபட்ட தேசத் தலைவர்களைப் போற்றிச் சிறப்பிக்கும் வகையில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள “விடுதலைப் போரில் வீரத்தமிழகம்” என்ற முப்பரிமாண ஒளிஒலிக் காட்சி 15.08.2022 அன்று மாண்புமிகு அமைச்சர் பெருமக்களால் திறந்து வைக்கப்பட்டது.

25.08.2022 வரை நடைபெற்று வந்த இம்முப்பரிமாண ஒளி-ஒலிக் காட்சியினை, பொதுமக்கள் மற்றும் கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள் அதிக அளவில் பார்வையிடுவதற்கு ஏதுவாக 01.09.2022 வியாழக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

200 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டங்கள், ஆங்கிலேயரின் அடக்குமுறைகள், சுதந்திரத்தின் அருமை ஆகியவற்றை இளம் தலைமுறையினரிடையே கொண்டு செல்லும் நோக்கில் இந்த முப்பரிமாண ஒளிஒலிக் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் இந்தியத் திருநாட்டின் விடுதலைக்குப் போராடிய அரும்பெரும் தலைவர்கள் மற்றும் வரலாற்று நிகழ்வுகள் கொண்ட மாதிரிகளை வடிவமைத்து, அவர்களின் வீரதீரச் செயல்கள் மற்றும் தியாகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தென்னகத்தில், குறிப்பாக வீரம் விளைந்த நம் தமிழகத்தில் தான் முதல் சுதந்திரப் போர் ஆரம்பமானது. வேலூர்க் கோட்டையில் நடைபெற்ற சிப்பாய்களின் புரட்சிதான் இந்தியாவில் நடந்த முதல் விடுதலைப் போராகக் கருதப்படுகிறது.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட பூலித்தேவன், ஒண்டிவீரன், வீரன் அழகுமுத்துக்கோன், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரமங்கை வேலுநாச்சியார், குயிலி, மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை போன்ற வீர மறவர்களின் போராட்டங்களும், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா, மகாகவி பாரதியார், பெரியார், மூதறிஞர் இராஜாஜி, திருப்பூர் குமரன், காமராஜர், கண்ணியத் தென்றல் காயிதே மில்லத், ஜே.சி. குமரப்பா, பசும்பொன் முத்துராமலிங்கம், கடலூர் அஞ்சலை அம்மாள் போன்ற எண்ணற்ற தலைவர்களின் தியாகங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்திய விடுதலைக்கு வித்திட்ட முத்தாய்ப்பான மூன்று போராட்டங்களான ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகிய நிகழ்வுகளும் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

இக்கண்காட்சி காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. இக்கண்காட்சிக்கு நுழைவுக் கட்டணம் ஏதுமில்லை. அனுமதி முற்றிலும் இலவசம். பொதுமக்கள், இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆகியோர் இந்த முப்பரிமாண ஒளி-ஒலிக் காட்சியினைப் பார்வையிட்டுப் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.