16 lakh devotees in Sabarimala: சபரிமலையில் நேற்று வரை 16 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்

சபரிமலை: 16 lakh devotees had darshan of Sami at Sabarimala till yesterday. சபரிமலையில்நேற்று வரை 16 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

கேரள மாநிலத்தின் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த நவம்பர் 16ம் தேதி முதல் நடை திறக்கப்பட்டது முதல் நாள்தோறும் சராசரியாக 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சபரிமலைக்கு பக்தர்கள் குறைந்த அளவே சென்று வந்தனர். மேலும் குறிப்பிட்ட அளவே கடந்த ஆண்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் கடந்த 5 ஆண்டுகளுக்குப்பின் பக்தர்கள் கூட்டம் தற்போது நிரம்பி வழிகிறது. பெரும் வெள்ளம், இளம் பெண்களின் வருகை மற்றும் கோவிட் காரணமாக 5 ஆண்டுகளாக பக்தர்களின் வருகை மிகவும் குறைவாக இருந்தது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கி கொள்ளப்பட்டதால் கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் தினமும் வருகிறார்கள்.

இந்த நிலையில் சபரிமலையில் தொடர்ந்து நான்காவது நாளாக கூட்டம் அலைமோதி வருகிறது. நேற்று 94,369 பக்தர்களும், வெள்ளிக்கிழமை 1,10,133 பக்தர்களும், வியாழக்கிழமை 96,030 பக்தர்களும் சாமி தரிசனம் செய்தனர். இன்று ஞாயிறுக்கிழமை என்பதால் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. நாளை 1.07 லட்சம் பேர் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்ட 24 நாட்களில் 125 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்த கோபன் சபரிமலை சன்னிதானத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது சபரிமலையில் நேற்று வரை 16 லட்சத்து 5 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர் என கூறினார். நடை திறக்கபட்ட 24 நாட்களில் வருமானம் மற்றும் காணிக்கையாக 125 கோடி ரூபாய் கிடைத்துள்ளது என்றார்.

சபரிமலைக்கு இந்த ஆண்டு ஏராளமான பக்தர்கள் வருகையையொட்டி நிலக்கல் பார்க்கிங் மைதானதில் வாகனங்கள் நிரம்பின, எருமேலி முதல் பம்பை வரை சபரிமலை செல்லும் சாலையில் வாகனங்கள் சாலையின் ஒருபுறம் நிறுத்தப்பட்டுள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் கே.எஸ்.ஆர்.டி.சி.யின் நீண்ட தூர பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் இருந்து பம்பைக்கு வந்த 227 பேருந்துகள் பல்வேறு இடங்களில் சிக்கின. இதனால் பக்தர்கள் திரும்பிச் செல்ல பேருந்து இல்லாமல் அவதிக்குள்ளாகினர்.