PM flags off Vande Bharat Express: நாக்பூரில் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் கொடியசைத்து தொடங்கிவைப்பு

நாக்பூர்: PM flags off Vande Bharat Express from Nagpur Railway Station. நாக்பூர்-பிலாஸ்பூர் இடையேயான வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

முன்னதாக வந்தே பாரத் விரைவு ரயிலின் பெட்டிகள், பயணிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்தும், கட்டுப்பாட்டு மையத்திலும் நாக்பூர் மற்றும் அஜ்னி ரயில் நிலையங்களின் மேம்பாட்டுப் பணிகளையும் பிரதமர் மோடி பார்வையிட்டார்.

வந்தே பாரத் விரைவு ரயல் சேவையால் நாக்பூர்-பிலாஸ்பூர் இடையேயான பயண நேரம், 7 முதல் 8 மணி நேரத்தில் இருந்து 5 மணி 30 நிமிடங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நாக்பூர்-பிலாஸ்பூர் இடையேயான வந்தே பாரத் விரைவு ரயில் சேவையைக் கொடியசைத்துத் துவக்கிவைக்கப்பட்டது. இதன் மூலம் ரயில்வே இணைப்பு கணிசமாக அதிகரிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தொடக்க விழாவில் பிரதமருடன், மகாராஷ்டிர முதலமைச்சர் க்நாத் ஷிண்டே, ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ், மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதன் மூலம், அந்தப் பிராந்தியத்தின் சுற்றுலா மேம்படுவதுடன், பயணிகளுக்கு வேகமான மற்றும் சொகுசான ரயில்வேப் பயணத்திற்கும் உதவும். இந்த ரயிலின் மூலம் நாக்பூர்-பிலாஸ்பூர் இடையேயான தூரத்தை 5 மணி 30 நிமிடங்களில் கடக்க முடியும். இது நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட 6–வது வந்தே பாரத் ரயில் ஆகும். இந்த ரயில், இதற்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட ரயில்களை விட, அதி நவீன வசதிகளைக் கொண்டிருப்பதுடன், பயண தூரத்தை அதிவேகமாகக் கடக்கும் திறன் படைத்தது.

குறைந்த பட்சம் மணிக்கு 100 கிலோ மீட்டர் முதல் , அதிகபட்சமாக மணிக்கு 180 கிலோ மீட்டர் வரை இந்த ரயில் வேகமாகச் செல்லும். முந்தைய ரயில்களைவிடக் குறைந்த, அதாவது 392 கிலோ எடை கொண்டது, இந்த மேம்படுத்தப்பட்ட ரயில். சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், 15 சதவீதம் மின்சாரச் சேமிப்பு அம்சங்களை உள்ளடக்கியது. எக்ஸிக்யூடிவ் கிளாஸ் பயணிகளுக்கு ஒரு பக்க சாய்வு இருக்கை வசதி, இந்த ரயிலில் அனைத்துபிரிவு பெட்டிகளிலும் வழங்கப்படுகிறது.