1,00,008 Vada Mala to Anjaneya: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடை மாலை.. சிறப்பு பூஜைகள்

நாமக்கல்: Special pujas were held on the occasion of Namakkal Anjaneyar Jayanti with 1,00,008 Vadaimalas. நாமக்கல் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 1,00,008 வடைமாலை சார்த்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

நாமக்கல் கோட்டையில் புரான சிறப்புப் பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஒரே கல்லினால் உருவான 18 அடி உயர ஆஞ்சநேயர் நின்ற நிலையில் சாந்த சொரூபியாக பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். ஆண்டுதோறும் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெறுகிறது.

இந்த விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்வதற்காக 1,00,008 வடைகள் தயாரிக்கும் பணி கடந்த 18ம் தேதி முதல் நடைபெற்று வந்தது. நேற்று இந்த பணிகள் முடிவடைந்து வடைகள் மாலைகளாக கோர்க்கப்பட்டன. நள்ளிரவு முதல் 20 க்கும் மேற்பட்ட கோயில் பட்டாச்சாரியார்கள் சாமிக்கு வடை மாலை அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இன்று அதிகாலை 5 மணிக்கு ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடை மாலை அலங்காரம் செய்யப்பட்டு திரை விலக்கப்பட்டு மகா தீபாராதணை நடைபெற்றது.

நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங், எம்எல்ஏ ராமலிங்கம், நகராட்சித் தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, போலீஸ் ஏடிஎஸ்பி மணிமாறன், டிஎஸ்பி சுரேஷ், கோயில் உதவி கமிஷனர் இளையராஜா, நகராட்சி கவுன்சிலர்கள், கட்டளைதாரர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இன்று 11 மணிக்கு வடை மாலை அலங்காரம் கலைக்கப்பட்டு, நல்லெண்ணை, 1008 லிட்டர் பால், தயிர், திருமஞ்சள், சீயக்காய்தூள், பஞ்சாமிர்தர் போன்ற வாசனைப் பொருட்களால் சாமிக்கு சிறப்பு அபிசேகம் நடைபெறும். பின்னர் தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு மகா தீபாரதனை நடைபெறும். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.

ஆஞ்சநேயருக்கு சார்த்துவதற்காக, 1,00,008 வடை தயாரிக்கும் பணி அருள்மிகு ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் கடந்த 5 நாட்களாக நடைபெற்றது. இதற்காக ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் மடப்பள்ளியை சேர்ந்த ரமேஷ் தலைமையில் 30 பேர் கொண்ட குழுவினர் நாமக்கல் வந்து, வடை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். 1,00,008 வடை தயாரிப்பதற்கு 90 மூட்டை உளுத்தம் பருப்பு, 200 கிலோ நல்லெண்ணெய், 36 கிலோ சீரகம் மற்றும் மிளகு, 135 கிலோ உப்பு ஆகியவை பயன்படுத்தப்ட்டது.

ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்துள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் நள்ளிரவு முதலே சாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட கியூவில் காத்துள்ளனர். இதையொட்டி பக்தர்கள் வரிசையாக சென்று வரும் வகையில் கோயில் பகுதிகளிலும், கோயில் அமைந்துள்ள தெருக்களிலும் பேரிகார்டு அமைத்து தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக நாமக்கல்லில் கோட்டை ரோடு, பார்க் ரோட்டில் எம்ஜிஆர் ஆர்ச்சில் இருந்து மதுரை வீரன் கோவில் வரை முழுமையாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

மோகனூர் ரோடு, திருச்சி ரோடு, துறையூர் ரோடு வழியாக வரும் பக்தர்கள் பரமத்தி ரோட்டில் வந்து வலதுபுறமாக திரும்பி, பொய்யேரிக்கரை பகுதியில் உள்ள பார்க்கிங் பகுதியில் தங்கள் வாகனங்களை நிறுத்த வேண்டும். ஈரோடு, திருச்செங்கோடு பகுதியில் இருந்து வரும் பக்தர்கள் நல்லிபாளையம் நயாரா பெட்ரோல் பங்க் வழியாக வலது புறம் திரும்பி வந்து பொய்யேரிக்கரை பகுதியில் தங்கள் வாகனங்களை நிறுத்த வேண்டும். இருசக்கர வாகனங்களில் வருவோர் தங்கள் வாகனங்களை பார்க் ரோட்டில் நிறுத்த வேண்டும். நான்கு சக்கர வாகனங்களில் வருபவர்கள் பொய்யேரிக்கரை பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.

நாமக்கல் டவுனில் இருந்து வரும் பக்தர்கள் உழவர் சந்தை அருகில் தங்களின் காலணிகளை விட்டுச் செல்ல வேண்டும். சேலம் ரோடு வழியாக வரும் பக்தர்கள் ராக் ஸ்டுடியோ மற்றும் பார்க் அருகிங் தங்களின் காலணிகளை விட வேண்டும். கோயில் அமைந்துள்ள நாமக்கல் கோட்டை பகுதி முழுவதும் டிரோன் மூலம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் உதவி கமிஷனர் இயைராஜா மற்றும் அலுவலர்கள் செய்துள்ளனர்.