IND vs NZ: இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது நியூசிலாந்து அணி

கிறிஸ்ட்சர்ச்: New Zealand win series 1-0 against India. இந்தியா- நியூசிலாந்து இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது.

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில் 2வது போட்டி மழை காரணமாக நிறுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து 3வது போட்டி இன்று ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து விளையாடிய இந்திய அணி, 47 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 219 ரன்களை எடுத்திருந்தது. இந்திய அணியின் வாஷிங்டன் சுந்தர் அதிகபட்சமாக 51 ரன்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 49 ரன்களையும், கேப்டன் தவான் 28 ரன்களையும் எடுத்திருந்தனர்.

இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணியின் மிட்செல், மில்னே ஆகியோர் சிறப்பாக பந்து வீசி தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். சௌதீ 2 விக்கெட்களையும் ஃபெர்குசன், சாண்ட்னர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நிலையாக விளையாடினர். ஃபின் ஆலன் 57 ரன்களில் ஆட்டமிழக்க, கான்வே 38 ரன்களுடனும் வில்லியம்சன் ரன்கள் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்த நிலையில் மழையால் இந்தப் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதனால் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.