Inauguration of Multi-Purpose Gymnasium: தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக்கழக வளாகத்தில் பல்நோக்கு ஜிம்னாஷியம் திறப்பு

சென்னை: Inauguration of Multi-Purpose Gymnasium at Tamil Nadu Sports University Campus. தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.15.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு ஜிம்னாஷியம், செயற்கையிழை ஓடுதளம் மற்றும் ஆசிரியர்களுக்கான குடியிருப்புகள் ஆகியவற்றை முதல்வர் திறந்து வைத்தார்.

சென்னை தலைமை செயலகத்தில் இன்று, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக வளாகத்தில் 15 கோடியே 60 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு ஜிம்னாஷியம், செயற்கையிழை ஒடுதளம் மற்றும் ஆசிரியர்களுக்கான குடியிருப்புகள் ஆகியவற்றை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரை அடுத்த மேலக்கோட்டையூரில் அமைந்துள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக வளாகத்தில் 7 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 400 மீட்டர் செயற்கையிழை ஒடுதளம், 5 கோடியே 10 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு ஜிம்னாஷியம் மற்றும் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான குடியிருப்புகள், என மொத்தம் 15 கோடியே 60 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் மு.சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.