‘Smartboxer’ Software: குத்துச்சண்டையை மேம்படுத்த ‘ஸ்மார்ட்பாக்சர்’ மென்பொருள்; ஐஐடி மெட்ராஸ் உருவாக்கம்

சென்னை: IIT Madras is developing ‘Smartboxer’ software to improve boxing. குத்துச்சண்டையை மேம்படுத்த ‘ஸ்மார்ட்பாக்சர்’ மென்பொருளை ஐஐடி மெட்ராஸ் உருவாக்கி வருகிறது.

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழக (ஐஐடி மெட்ராஸ்) ஆராய்ச்சியாளர்கள் இன்ஸ்பயர் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ் (IIS) உடன் இணைந்து, 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்கங்களை அதிகரிக்கச் செய்ய மேம்பட்ட குத்துச்சண்டை பகுப்பாய்வு மென்பொருளை உருவாக்கி வருகின்றனர்.

விளையாட்டு அறிவியல் மற்றும் பகுப்பாய்வுக்கான தனிச்சிறப்பு மையம் (Centre of Excellence for Sports Science and Analytics), பல பதிப்புகளைக் கொண்ட ஸ்மார்ட்பாக்சர் என்ற பகுப்பாய்வு மென்பொருளை உருவாக்கி உள்ளது.

அணியக்கூடிய சென்சார்கள் மற்றும் வீடியோ கேமராக்களைப் பயன்படுத்தி இண்டர்நெட்-ஆஃப்-திங்ஸ் (IoT) மூலம் பின்னூட்டம் மற்றும் செயல்திறன் மதிப்பீடுகளை இந்த பகுப்பாய்வுத் தளம் வழங்கும். இந்திய விளையாட்டு வீரர்களின் போட்டித் திறனை மேம்படுத்த இது உதவும்.

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் அமைந்துள்ள இன்ஸ்பயர் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ் (IIS) நிறுவனத்தில் ஸ்மார்ட்பாக்சர் பயன்படுத்தப்பட்டு, குத்துச்சண்டை வீரர்களின் செயல்திறன் ஆய்வு செய்யப்படும். ஐஐஎஸ்-ல் இருந்து பெறப்படும் பின்னூட்டத்தின் அடிப்படையில், ஸ்மார்ட்பாக்சர் பகுப்பாய்வுத் தளத்தில் மாற்றங்கள் இணைக்கப்படும். இதன்மூலம் பயிற்சியாளர்கள் மற்றும் குத்துச்சண்டை வீரர்களுக்கு உதவிடும் வகையில் இந்த மென்பொருளை திறம்படப் பயன்படுத்த முடியும்.

விளையாட்டுப் பொறியியல் (Sports Engineering) என்ற ஒப்பீட்டு அளவிலான புதிய துறைக்கு கணிதம், இயற்பியல், செயற்கை நுண்ணறிவு, இண்டர்நெட்- ஆஃப்-திங்ஸ் தொடர்புடன் அணியும் பொருட்கள் ஆகியவை இடைநிலைக் களமாக பயன்படுத்தப்படும். உடலியல், உயிர்இயக்கவியல் போன்ற விளையாட்டுடன் தொடர்பு உடையவற்றைப் புரிந்துகொள்ள விளையாட்டுப் பொறியியல் உதவிகரமாக இருக்கும். அத்துடன், விளையாடுவதில் உள்ள பிரச்சனைகளைத் தீர்க்கவும், விளையாட்டு சாதனங்களை நன்கு வடிவமைக்கவும் இது உதவும்.

ஒலிம்பிக் பதக்கங்களை அதிகரித்தல் 2024 ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களை அதிகரிக்க வேண்டும் என்ற லட்சிய இலக்கை எட்டிப் பிடிக்க, குறிப்பிட்ட சில முக்கிய விளையாட்டுகளை இந்திய அரசு பட்டியலிட்டு, அவற்றுக்கான முயற்சிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. வில்வித்தை, குத்துச்சண்டை, பேட்மிண்டன், மல்யுத்தம், ஹாக்கி, பளுதூக்குதல், சைக்கிள் பந்தயம், தடகளம் போன்ற விளையாட்டுகள் இதில் அடங்கும்.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில், ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வெல்வதற்கு பத்தாண்டுகளோ, அதற்கும் அதிகமாகவோ தேவைப்படும். இந்த இலக்கை எட்டிப்பிடிக்க தொழில்நுட்ப அடிப்படையிலான வீரர்களின் செயல்திறன் மேம்பாட்டை ஏற்றுக் கொள்வது முக்கியமான ஒன்றாகும்.

இதனை குறிக்கோளாகக் கொண்டுதான் ஸ்மார்ட்பாக்சர் மென்பொருளை ஐஐடி மெட்ராஸ் மேம்படுத்தி வருகிறது. ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை உயர்த்த ஸ்மார்ட்பாக்சர் எவ்வாறு உதவும் என்பதை விளக்கிய ஐஐடி மெட்ராஸ்-ன் ரசாயனப் பொறியியல் துறை இணை ஆசிரியரும், விளையாட்டு அறிவியல் மற்றும் பகுப்பாய்வுக்கான தனிச்சிறப்பு மையத்தின் தலைவருமான பேராசிரியர் ரங்கநாதன் ஸ்ரீனிவாசன் கூறும்போது, பயிற்சியாளருக்கும், உயர்நிலை விளையாட்டு வீரருக்கும் இடையே செயல்திறனை அடையாளம் காணவும், புரிந்து கொள்ளவும், ஆக்கபூர்வமாக மேம்படுத்தவும் தற்போது உருவாக்கப்பட்டு உள்ள தொழில்நுட்பம் பாலமாக செயல்படும். ஒலிம்பிக் போட்டிகளில் அதிகப் பதக்கங்களை வெல்லும் இந்திய அரசின் லட்சிய இலக்கை அடைய ஐஐடி மெட்ராஸ் மேற்கொண்டு இருக்கும் பல்வேறு முன்முயற்சிகளில் ஸ்மார்ட்பாக்சரும் ஒன்றாகும் எனக் குறிப்பிட்டார்.

இன்ஸ்பயர் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ் (IIS) குத்துச்சண்டைப் பிரிவில் இளைஞர் மேம்பாட்டுத் தலைவரான ஜான் வார்பர்டன் கூறும்போது, குத்துச் சண்டை வீரரின் செயல்திறனில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பகுப்பாய்வு செய்ய இந்த அமைப்புமுறை உதவியாக இருக்கும். வீரர்களின் பலம் என்னென்ன? செயல்பாட்டு நிலைகள், பஞ்ச்-கள், தற்காப்புத் திறமைகள் ஆகியவற்றில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டிய இடங்கள் எவை எவை? ஆகியவற்றை தொழில்நுட்பம், தந்திரங்கள் ஆகியவற்றின் அடிப்பயில் எங்களால் எடுத்துரைக்க முடியும். பயிற்சிப் புள்ளிகளைக் கண்டறியவும், வீரர்கள் குறித்த கூர்நோக்குகளை விளக்கவும் ஏதுவாக, தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கான அமைப்பின் திறனைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன், என்றார்.

ஆய்வுமுறை இன்டர்நெட்-ஆஃப்-திங்ஸ் அடிப்படையிலான சென்சார்கள், வீடியோ கேமராக்களைப் பயன்படுத்தி, விளையாட்டு வீரரின் செயல்திறன் குறித்த பகுப்பாய்வுகளை வழங்க இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

  1. பயன்படுத்தப்படும் இண்டர்நெட்-ஆப்-திங்ஸ் (IoT) அடிப்படையிலான தயாரிப்புகள், பஞ்ச்-ன் வேகத்தை ஆய்வு செய்யும் வகையில் சென்சாருடன் கூடிய கையுறைகள், தரை வினை விசையைப் (Ground Reaction Force) பதிவு செய்வதற்காக வயர்லெஸ் ஃபுட் இன்சோலுடன் கூடிய அழுத்தமானி, விளையாட்டு வீரர்கள் உடலின் கீழ்பகுதியில் இயக்கத்தைப் பதிவு செய்வதற்காக வயர்லெஸ் இ.எம்.ஜி. சென்சார்கள், விளையாட்டு வீரர்கள் உடலின் மேல்பகுதியில் இயக்கத்தைப் பதிவு செய்வதற்காக இயக்கசக்தி (Inertial) அளவீட்டு அலகு, குத்துச்சண்டை வளையத்தில் வைக்கப்படும் வீடியோ கேமராக்கள்,
  2. வீரரின் இடது, வலது கைகளை அடையாளம் காண்பதுடன், தாக்குதல், தற்காப்பு, பாசாங்கு ஆகியவற்றை வகைப்படுத்தும் குத்துச்சண்டை வீரரின் குறிப்பிட்ட பாணி பற்றிய தகவல்களைக் கொண்டு ஒட்டுமொத்த குத்துச்சண்டை பகுப்பாய்வுகளைப் பெறுவதற்காக சென்சார்கள், வீடியோ கேமராக்களில் இருந்து பெறப்பட்ட ஆய்வு முடிவுகள்

ஒருங்கிணைக்கப்படும். ஒலிம்பிக்கிற்கான குத்துச்சண்டைப் போட்டிகளின்போது இந்த பாணியைக் கொண்டு மதிப்பீடு செய்யப்படும். பஞ்ச்-ன் தன்மை, தரம், ஈடுபாடுகளின் ஆதிக்கம், போட்டித்தன்மை போன்றவை இதில் அடங்கும்.
பகுப்பாய்வுத் தளத்தின் பிரத்யேக அம்சங்களை விளக்கிய ஐஐடி மெட்ராஸ்-ன் அப்ளைடு மெக்கானிக்ஸ் துறையின் இணைப் பேராசிரியர் டாக்டர் பாப்ஜி ஸ்ரீனிவாசன் கூறுகையில், வீடியோ தொகுப்புகள், பலவிதமான இண்டர்நெட்- ஆப்-திங்ஸ் சாதனங்களில் இருந்து ஸ்மார்ட்பாக்சர் முறையில் தகவல்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இவ்வாறு பன்முகத் தரவுகளில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட பகுப்பாய்வுத் தகவல்கள், பயிற்சியாளர்களுக்கு உதவுவது மட்டுமின்றி, குத்துச்சண்டை சாம்பியன்களின் குறிப்பிட்ட பாணியை நடுவர்கள் மதிப்பீடு செய்யவும் உதவும்.
ஐஐஎஸ்-ல் சரிபார்க்கப்பட்ட பின், ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் ஐஐஎஸ்-உடன் இணைந்து ஸ்மார்ட்பாக்சர் காப்புரிமைக்காக விண்ணப்பிக்கத் திட்டமிட்டு உள்ளனர்.
”இளைஞர்களுக்கான விளையாட்டுகளில் உயர் செயல்திறனுக்காக புதுமையான தொழில்நுட்ப மற்றும் விளையாட்டு அறிவியல் பயிற்சிகள்; என்ற தலைப்பில் இரண்டுநாள் மாநாடு நடைபெற்றது. இந்திய விளையாட்டு ஆணையத்தின் ஒரு பிரிவான தேசிய விளையாட்டு அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையமும், ஐஐடி மெட்ராஸ்-ன் விளையாட்டு அறிவியல் மற்றும் பகுப்பாய்வு மையமும் இணைந்து கடந்த ஜூன் 2022 முதல்வாரத்தில் இந்த மாநாட்டை ஹரியானா மாநிலம் பஞ்சகுலாவில் நடத்தின.
விளையாட்டுத் தொழில்நுட்பம் மற்றும் உயர்செயல்திறன் கொண்ட விளையாட்டு சாதனங்கள் ஆகியவற்றில் இந்தியா தற்சார்பு அடைவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட, ஐஐடி மெட்ராஸ், இந்திய விளையாட்டு ஆணையம் ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
பேராசிரியர் மகேஷ் பஞ்சக்நுலா, டீன் (முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் தொடர்பு), டாக்டர் நந்தன் சுதர்சனம், மேலாண்மை ஆய்வுகள் துறை இணைப் பேராசிரியர், பேராசிரியர் ஏ.என்.ராஜகோபால், மின்சாரப் பொறியியல் துறை, பேராசிரியர் ரங்கநாதன் ஸ்ரீனிவாசன், டாக்டர் பாப்ஜி ஸ்ரீனிவாசன் உட்பட ஐஐடி மெட்ராஸ் ஆசிரியர்கள் பலர் மாநாட்டின் போது உரை நிகழ்த்தினார்கள்.