Walkout Demanding Nlc: 25,000 ஏக்கர் வேளாண் நிலத்தை பறிக்கும் என்.எல்.எசி. கண்டித்து நடைபயணம்

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடலூர் மாவட்டம் நெய்வேலியில் (Walkout Demanding Nlc) என்.எல்.சி நிறுவனத்தின் புதிய சுரங்கம் மற்றும் ஏற்கனவே உள்ள சுரங்கங்களின் விரிவாக்கத்திற்காக பொன்விளையும் பூமி 25 ஆயிரம் ஏக்கரை கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை என்.எல்.சி நிறுவனமும், மாவட்ட நிர்வாகமும் தீவிரப்படுத்தியிருக்கின்றன. கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பறிப்பதற்கான இந்த நடவடிக்கைகள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை.

நெய்வேலி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள மக்களின் வேளாண் நிலங்களை கையகப்படுத்தி அமைக்கப்பட்ட சுரங்கங்கள் மற்றும் அனல் மின்நிலையங்களை பயன்படுத்தி என்.எல்.சி நிறுவனம் ஆண்டுக்கு ரூ.12,000 கோடி வருவாய் ஈட்டும் நவரத்னா நிறுவனமாக உருவெடுத்துள்ளது. என்.எல்.சி முதல் சுரங்கத்தை விரிவாக்கம் செய்வதற்காக 9 கிராமங்களில் இருந்து 3000-க்கும் அதிகமான ஏக்கர் நிலங்களும், இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்காக 25 கிராமங்களில் இருந்து 10,000 ஏக்கர் நிலங்களும் கையகப்படுத்தப்படவுள்ளன; இவை தவிர மூன்றாவது சுரங்கத்திற்காக கொளப்பாக்கம், அரசகுழி, சிறுவரப்பூர், உள்ளிட்ட 26 கிராமங்களில் உள்ள 12,125 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளன. இவற்றின் பரப்பு இதுவரை கையகப்படுத்தப்பட்ட 37,256 ஏக்கரில் சுமார் நான்கில் மூன்று பங்காகும்.

என்.எல்.சிக்காக 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், அவற்றை வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் சுமார் 17 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்படும். கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள் சாதாரணமானவை அல்ல. அவை முப்போகம் விளையக்கூடிய வளமான நிலங்கள் ஆகும். மலைக் காய்கறிகள் உள்ளிட்ட அனைத்துப் பயிர்களும் இந்த நிலங்களில் விளையும். இப்போது கூட அங்கு நெல், கரும்பு, வாழை ஆகிய பயிர்கள் மட்டுமின்றி முட்டைக்கோஸ் போன்ற பயிர்கள் விளைகின்றன.

ஓர் ஏக்கரில் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருவாய் ஈட்டித் தரக் கூடிய வளமான நிலங்களை நிலக்கரி சுரங்கத்திற்காகப் பறித்து விட்டு, அவற்றின் உரிமையாளர்களை சொந்த மண்ணிலேயே அகதிகளாக்க என்.எல்.சி நிறுவனமும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் துடிப்பதை பாட்டாளி மக்கள் கட்சி அனுமதிக்காது.

என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்காக நிலங்களைத் தருவதால் மக்களுக்கு எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை. மாறாக அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலை தான் ஏற்படும். என்.எல்.சிக்காக கடந்த காலங்களில் 37,256 ஏக்கர் நிலங்களைக் கொடுத்த 25 ஆயிரம் குடும்பங்களிலிருந்து ஒருவர் கூட இப்போது என்.எல்.சியில் வேலையில் இல்லை. இப்போது நிலம் தருபவர்களுக்கும் அதே நிலை தான் ஏற்படும். அதை உணர்ந்ததால் தான் மக்கள் தங்களின் நிலங்களைக் கொடுக்க மறுக்கின்றனர்.

ஆனால், அதிகாரத்தை ஏவி, மக்களை அச்சுறுத்தி நிலங்களை பறிக்கும் நடவடிக்கைகளில் என்.எல்.சி நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது. இதற்காக கடலூர் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளும், காவல்துறையினரும் ஊர் ஊராகச் சென்று, என்.எல்.சிக்கு நிலங்களை தரும்படி மிரட்டுகின்றனர். என்.எல்.சி நிறுவனம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மிரட்டல்களுக்கு கடலூர் மாவட்ட மக்கள் அஞ்ச மாட்டார்கள்.

இதற்கெல்லாம் மேலாக விவசாயத்தை அழித்து, மூன்றாவது நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு எந்தத் தேவையும் இல்லை. ஏனெனில், இரண்டாவது சுரங்கம் அமைப்பதற்காக 1985-ஆம் ஆண்டில் கையகப் படுத்தப்பட்ட நிலங்களில் 10,000 ஏக்கர் நிலங்கள் 37 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தபடவில்லை. ஆனாலும், இன்னும் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த என்.எல்.சி துடிப்பதற்கு பின்னால் வேறு காரணங்கள் உள்ளன. என்.எல்.சி நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கு முன்பாக 25,000 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி அதையும் தனியாரிடம் ஒப்படைப்பதற்காகத் தான் என்.எல்.சியும், மாவட்ட நிர்வாகமும் மக்களை மிரட்டுகின்றன.

மக்களின் காவலனாக இருக்க வேண்டிய தமிழக அரசு என்.எல்.சியின் முகவராக செயல்படக்கூடாது. கோவை மாவட்டம் அன்னூரில் சிப்காட் அமைப்பதற்காக வேளாண் விளைநிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து அங்குள்ள உழவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து அங்குள்ள விளைநிலங்கள் கையகப்படுத்தப்படாது என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அன்னூருக்கு ஒரு நீதி…, கடலூருக்கு ஒரு நீதி என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழக அரசு நடத்தக்கூடாது. அது பெரும் அநீதியாகும்.
கடலூர் மாவட்ட மக்களின் பாதுகாவலனாக திகழ்வது பாட்டாளி மக்கள் கட்சி தான். இதற்கு முன் ‘மூன்றாவது சுரங்கம்’ அமைப்பதற்காக 26 கிராமங்களில் 12,125 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்த கடந்த 2018-ஆம் ஆண்டில் என்.எல்.சி பணிகளைத் தொடங்கியது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எனது தலைமையில் 26.12.2018 அன்று நெய்வேலியில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து மூன்றாவது சுரங்கத்திற்காக நிலம் கையகப்படுத்துவதை என்.எல்.சி கைவிட்டது. அதேபோல், இப்போதும் மக்களிடமிருந்து 25,000 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தும் முயற்சியையும் பாமக முறியடிக்கும்.

அதுமட்டுமின்றி என்.எல்.சி நிறுவனத்தால் கடலூர் மாவட்டத்திற்கு நன்மைகள் எதுவும் நடக்கவில்லை; தீமைகள் தான் விளைந்துள்ளன. என்.எல்.சி நிறுவனத்திற்காக இதுவரை 37,256 ஏக்கர் நிலம் கொடுத்த 25,000 குடும்பங்களில் 1827 பேருக்கு மட்டும் தான் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. அவர்களும் ஓய்வு பெற்று விட்ட நிலையில், இப்போது ஒப்பந்தத் தொழிலாளர்களாக மட்டும் 3500 பேர் பணியாற்றுகின்றனர். அண்மையில் நியமிக்கப்பட்ட 299 பொறியாளர்களில் ஒருவர் கூட தமிழர்கள் இல்லை. உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பலமுறை வலியுறுத்தியும் என்.எல்.சி ஏற்கவில்லை.

என்.எல்.சி நிறுவனம் கடந்த 60 ஆண்டுகளாக நிலத்தடி நீரை உறிஞ்சி நீர்மட்டத்தை 1000 அடிக்கும் கீழே தள்ளியுள்ளது. ஒட்டுமொத்த கடலூர் மாவட்டத்தின் சுற்றுச்சூழலையும் சீரழித்து பாலைவனமாக்கி வருகிறது. என்.எல்.சி நிறுவனத்தால் பழுப்பு நிலக்கரி மற்றும் பிற தாதுக்கள் வெட்டி எடுக்கப்பட்டதால் ஏற்பட்ட மோசமான விளைவுகளை கருத்தில் கொண்டு பார்க்கும் போது, ஒட்டுமொத்த கடலூர் மாவட்டமும் பாதிக்கப்பட்ட பகுதியாக கடலூர் மாவட்ட தாது அறக்கட்டளையால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இப்படியாக பாதிப்புகளை மட்டுமே பரிசாக வழங்கும் என்.எல்.சி நிறுவனத்தின் நிலப்பறிப்பு முயற்சியை முறியடித்து உழவர்களைக் காக்கவும், என்.எல்.சி நிறுவனத்தை கடலூர் மாவட்டத்திலிருந்து வெளியேற்றவும் எந்த எல்லைக்கும் சென்று போராட பா.ம.க. தயாராக உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக திகழும் விளைநிலங்களை பறிக்கும் முயற்சியை வீழ்த்த வேண்டும்; கடலூர் மாவட்டத்தின் சுற்றுச்சூழலையும், பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் சீரழிக்கும் என்.எல்.சி நிறுவனம் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி ஜனவரி 7 மற்றும் 8&ஆம் தேதிகளில் கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எழுச்சி நடை பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். எந்தெந்த நேரத்தில் எந்தெந்த பகுதிகள் வழியாக பயணிக்கிறேன் என்பது உள்ளிட்ட எழுச்சி நடை பயணத்தின் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

முந்தை செய்தியை பார்க்க:T20 World Cup For The Visually Impaired Team: பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான டி20 உலகக்கோப்பை: சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணி

முந்தை செய்தியை பார்க்க:This isnt Nehrus India: இது நேருவின் இந்தியா கிடையாது: ராகுல் காந்தியின் கருத்துக்கு பா.ஜ.க. பதிலடி