CM facing dead line : இடஒதுக்கீடு செய்ய‌ காலக்கெடு: முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு முள்ளாக மாறி வருகிறது முதல்வர் நாற்காலி

பெங்களூரு: karnataka CM Basavaraj Bommai facing dead line : திடீர் அதிர்ஷ்டத்தால் முதல்வர் ஆன பசவராஜ் பொம்மைக்கு, இனி கடந்த காலத்தைப் போல் முதல்வர் பதவி வகிப்பது அவ்வளவு சுலபமானதல்ல. ஏற்கனவே அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதையடுத்து, தற்போது இடஒதுக்கீடு பிரச்னை முதல்வருக்கு தலைவலியாக உள்ளதால், லிங்காயத் பஞ்சமஷாலி இடஒதுக்கீட்டிற்கு கேட்டு விதித்துள்ள காலக்கெடு தலைமீது தொங்கும் கத்தியை போல அவருக்கு ஆகியுள்ளது.

ஏற்கனவே தீவிர‌ போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்த லிங்காயத்து பஞ்சமஷாலி போராட்டக்காரர்கள், தற்போது முதல்வருக்கு 3 மாத கெடு விதித்துள்ள‌னர். இதற்கு கால அவகாசம் இருந்ததால் முதல்வர் அதைப்பற்றி கவலைப்படாமல் இருந்தார். ஆனால், தற்போது காலக்கெடு நெருங்கி வருவதால், முதல்வர் பசவராஜ் பொம்மை கவலை அடைந்துள்ளார். இடஒதுக்கீடு பிரச்னையில், லிங்காயத்து பஞ்சமஷாலி சமுதாய மடாதிபதிகள் மட்டுமின்றி, அச்சமுதாயத்தைச் சேர்ந்த எம்எல்ஏக்களும் அவருக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

அண்மையில் முதல்வர் பசவராஜ் பொம்மையை சந்தித்த பாஜக எம்எல்ஏ பசனகவுடா பாட்டீல் யத்னால், இடஒதுக்கீடு குறித்து விவாதித்தார். பசனகவுடா பாட்டீல் யத்னால், காலக்கெடுவை முதலமைச்சருக்கு நினைவூட்டி, உரிய முடிவை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். சந்திப்பின் போது, நீங்கள் கால அவகாசம் கேட்டதால் சமுதாயத்தைச் சேர்ந்த மடாதிபதிகள் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர். அதனால் நீங்கள் சொன்னபடி நடக்க வேண்டும். எங்களுக்கு வேறு யாரை பற்றியும் கவலை இல்லை, ஆனால் எங்கள் சமுதாய‌த்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும். நீங்கள் சொன்னது போல் 2 மாதத்தில் இட ஒதுக்கீடு குறித்து உரிய முடிவை எடுங்கள் என‌ யத்னால் கூறியதாக தெரிகிறது.

ஆனால், முதல்வருக்கு இந்த இடஒதுக்கீடு அறிவிப்பு அவ்வளவு எளிதானது அல்ல. லிங்காயத் பஞ்சமசாலி சமுதாய‌ம் மட்டுமின்றி மற்ற சமூகத்தினரும் இட ஒதுக்கீடு கேட்டு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். வால்மீகி சமூகம் இடஒதுக்கீட்டின் சதவிகிதத்தை அதிகரிக்க வலியுறுத்தி, பிரசன்னானந்த சுவாமிகள் சுதந்திர பூங்காவில் உள்ளிருப்புப் போராட்டத்தைத் நடத்தினார். தலித் (இடது பிரிவு) சமுதாயத்தினர் இடஒதுக்கீட்டை உயர்த்தக் கோரியும், குருபா சமுதாயத்தினர் தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வலியுறுத்தி வருகின்றனர்.

எனவே, சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் மாநிலத்தில் பாஜக அரசு இடஒதுக்கீடு பிரச்னையை எதிர்கொள்ளப் போவது உறுதியாகிவிட்டது. காலக்கெடுக்குள் லிங்காயத்து பஞ்சமஷாலி சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கவில்லை என்றால், முதல்வர் நாற்காலி அவருக்கு முள் கிரீடமாக மாறி, பதவியில் தொடர்ந்து நீடிக்க முடியுமா? என்பதே அரசியல் வல்லுநர்களின் கேள்வியாக‌ உள்ளது.