Sbi Exam On Pongal:பொங்கல் அன்று வங்கி தேர்வு நடத்துவதை தள்ளி வைக்க வேண்டும்: தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.

சென்னை: பொங்கல் தினத்தில் (Sbi Exam On Pongal) எஸ்.பி.ஐ. தேர்வு நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால், புதிய தேர்வு அட்டவணையை வெளியிட வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கடிதம் எழுதியிருக்கிறார்.

இந்தியா முழுவதும் எஸ்.பி.ஐ. வங்கியின் கிளார்க் பணிக்கான முதல்நிலைத் தேர்வு அண்மையில் நடந்தது. அதற்கான முடிவுகளும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அந்த பணிக்கான முதன்மைத் தேர்வு வருகின்ற ஜனவரி 15ம் தேதி நடைபெறுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அன்றைய நாள் தமிழ்நாடு மற்றும் புதுவையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் அங்குள்ள தேர்வர்கள் மிகப்பெரிய அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழர்களின் பண்டிகை சமயங்களில் வங்கி தேர்வுக்கு எப்படி நடத்தலாம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இது தொடர்பாக தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: தமிழ் சமூகம் கொண்டாடும் அறுவடைத் திருநாள் பொங்கல் என்றும், இதனை பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் சங்கமம் என்று தமிழர்கள் கருதுகின்றனர். மேலும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் ஜனவரி 15ம் தேதி எஸ்பிஐ வங்கி தேர்வு நடைபெறுவதால், தமிழகம் மற்றும் புதுச்சேரி தேர்வர்கள் அதிர்ச்சியடைந்திருப்பதாக அவர், புதிய தேர்வு அட்டவணையை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.