Punjab Minister Resigns:ஊழல் குற்றச்சாட்டு: பஞ்சாப் அமைச்சர் பவுஜா சிங் சராரி ராஜினாமா

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் (Punjab Minister Resigns) காங்கிரஸ் ஆட்சி வீழ்த்தப்பட்டு ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. அதிலும் ஊழலுக்கு எதிரான கட்சியாக தன்னை நிலை நிறுத்தி வரும் நிலையில் அதற்கான குற்றச்சாட்டில் ஈடுபடுபவர்களை பதவியில் இருந்து நீக்கியும் வருகிறது.

இந்நிலையில், தோட்டக்கலைத்துறை அமைச்சராக பவுஜா சிங் சராரி பதவி வகித்து வந்தார். இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் இன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பவுஜா சிங் பேசிய ஆடியோ ஒன்று வைரலானது. அப்போது அதில் பணம் கையாடல் தொடர்பாக பேசுகின்ற வகையில் பதிவாகி இருந்தது. இந்த ஆடியோ பஞ்சாப் மாநிலத்தில் பரவலாக பேசப்பட்டு வந்தது. இதனிடையே ஆம் ஆத்மி கட்சி தலைமை பவுஜா சிங்குக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அமைச்சர் பவுஜா சிங் சராரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த ராஜினாமாவுக்குப் பிறகு, பஞ்சாப் அமைச்சரவையில் பெரும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து பிரச்சாரம் செய்யும் ஆம் ஆத்மி கட்சியிலேயே ஊழல் நடக்கிறதா என்று மக்கள் மத்தியில் பேசும் பொருளாக உள்ளது.