Order To District Secretaries:நாடாளுமன்ற தேர்தல் வேலையை தொடங்க எடப்பாடி பழனிசாமி உத்தரவு

சென்னை: ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது மற்றும் உச்ச நீதிமன்றத்தில் அடுத்த மாதம் வரவுள்ள வழக்கு சாதகமாக இருக்குமா என்பது பற்றி கட்சியினர் மத்தியில் பேசப்பட்டுள்ளது.

மேலும், பொங்கள் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்காத தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடன் சென்றவர்களை சூழலிலும் அ.தி.மு.க.வில் இணைக்கக்கூடாது என்று மாவட்ட செயலாளர்கள் ஒருமித்தமாக குரல் எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில், ஓ.பி.எஸ். பற்றி யாரும் தரக்குறைவாக பேச வேண்டாம் எனவும், கட்சி பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள் என நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி தொடருமா என்ற கேள்விகள் எழுந்து வரும் நிலையில் கூட்டணி பற்றிய தகவல்கள் எதுவும் வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது.