OPS Munnetra Kazhagam: ஓ.பி.எஸ் முன்னேற்ற கழகம் என்ற கட்சி ஆரம்பிக்கலாம்: ஜெயக்குமார்

ஓ.பன்னீர்செல்வம் ஓ.பி.எஸ் (OPS Munnetra Kazhagam) முன்னேற்ற கழகம் என்கின்ற பெயரில் தனியாக கட்சி ஆரம்பித்து தன்னுடைய பலத்தை காண்பிக்கலாம் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடியாக கூறியுள்ளார்.

அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை அக்கட்சியின் பொதுக்குழு நீக்கியது. இதனால் அவர் தனியாக செயல்பட்டு வருகிறார். அவ்வப்போது கட்சியின் புதிய நிர்வாகிகளையும் தனிப்பட்ட முறையில் நியமித்து வருகிறார். அதே போன்று நேற்று (டிசம்பர் 21) ஓ.பி.எஸ் நியமித்த மாவட்ட செயலாளர்களுடன் தனியாக ஆலோசனை கூட்டம் நடத்தினர். அந்த கூட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது தரப்பினரை கடுமையாக விமர்சனம் செய்தார்.

இந்நிலையில், சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: நேற்று ஓ.பன்னீர்செல்வம் நடத்திய கூட்டத்தை அவரது தனிப்பட்ட நிறுவனத்தின் கூட்டமாக பார்க்கிறோம். கட்சியின் கூட்டமாக பார்க்கவில்லை. கடுமையான விரக்தியில் சென்றதால் பன்னீர்செல்வம் ஒருமையில் பேசி வருகிறார்.

தற்போதைய நிலையில் ஓ.பி.எஸ். அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது. நாங்கள் மிகவும் தெளிவாக உள்ளோம். நாங்கள் எதற்காக தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டும். ஓ.பி.எஸ். வேண்டுமானால் அவரது பெயரான ஓ.பி.எஸ் முன்னேற்ற கழகம் என்று ஆரம்பித்து தன்னுடைய பலத்தை காண்பிக்கலாம். கட்சி, சின்னம், அலுவலகம் என்று அனைத்து எங்களது கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே எல்லாமே நாங்கள்தான்.

இதனால் நாங்கள் கட்சி ஆரம்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. பன்னீர்செல்வம் தனியாக கட்சி ஆரம்பித்து பொதுமக்களின் ஆதரவை பெற்று நிரூபிக்கலாம். ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட போட்டி அணிகள் காணவில்லை. அதே போன்று இவர்களும் காணாமல் போவார்கள். நாங்கள் தான் தலைமைக் கழகம்.

ஓ.பி.எஸ். நீக்கியது பொதுக்குழுதான். கட்சியை பொறுத்தவரையில் பொதுக்குழுதான் உயர்ந்தது. பொதுக்குழு முடிவை உயர்நீதிமன்றமும் உறுதி செய்யதது. கட்சியை பொறுத்தமட்டில் அவர்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.

முந்தைய செய்தியை பார்க்க:Vaikom Vijayalakshmi Interview: மீண்டும் திருமணம் என்றாலே பயமாக உள்ளது: பாடகி வைக்கம் விஜயலட்சுமி

முந்தைய செய்தியை பார்க்க:Egg Price Today: முட்டை விலை 10 பைசா உயர்ந்து ரூ.5.40 ஆக நிர்ணயம்