Vaikom Vijayalakshmi Interview: மீண்டும் திருமணம் என்றாலே பயமாக உள்ளது: பாடகி வைக்கம் விஜயலட்சுமி

வருங்காலங்களில் திருமணம் செய்வது பற்றி இன்னும் ஆலோசிக்கவில்லை. உண்மையைச் சொல்ல நினைத்தால் திருமணம் பற்றி நினைத்தாலே பயமாக உள்ளது என்று (Vaikom Vijayalakshmi Interview) வைக்கம் விஜயலட்சுமி கூறியுள்ளார்.
கேரள மாநிலம், வைக்கம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் மலையாளத் திரைப்படங்களில் பின்னணி பாடகியாக திகழ்ந்து வந்த நிலையில், பிருத்விராஜ் நடித்த ‘ஜே.சி.டேனியல்’ படத்தில் இடம்பெற்ற ‘காற்றே காற்றே’ என்ற தமிழ் டப்பிங் பாடல் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இவர் ஒரு பார்வை மாற்றுத்திறனாளி ஆவார். தமிழில் சொப்பன சுந்தரி நான்தேனே என்ற பாடலால் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். அதனை தொடர்ந்து ஏராளமான பாடல்கள் மூலமாக தனக்கு என்ற ரசிகர் கூட்டத்தை வடிவமைத்துக் கொண்டார் என்றே சொல்லலாம்.

இதனிடையே வைக்கம் விஜயலட்சுமிக்கும், சந்தோஷ் என்ற நபருக்கும் கடந்த 2017ம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது சந்தோஷ் வீட்டில் அதிகமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டதால் அத்திருமணம் நிறுத்தப்பட்டது என்று வைக்கம் விஜயலட்சுமியே அறிவித்தார். இது சினிமா வட்டாரங்களில் மட்டுமின்றி ரசிகர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மிமிக்ரி கலைஞர் அனூப் என்பவருக்கும் விஜயலட்சுமிக்கும் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. சில மாதங்கள் அவருடன் வாழ்ந்து வந்த வைக்கம் விஜயலட்சுமி கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து விட்டார். அதற்கான விவாகரத்தும் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடிகை கவுதமி ஒரு தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வைக்கம் விஜயலட்சுமி தன்னுடைய திருமண வாழ்க்கை பற்றிய சில விஷயங்களை பகிர்ந்தார். அப்போது பேசிய வைக்கம் விஜயலட்சுமி, என்னை திருமணம் செய்த நபர் சேடிஸ்ட் என்பது காலம் போகப்போகத்தான் தெரியவந்தது. எனது குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டினார். இதற்காக முழுநேர பணியாகவே அவர் வைத்திருந்தார். என்னையே நம்பியிருந்த எனது பெற்றோரையும் பிரித்துவிட்டார். நான் சினிமா தொழிலை செய்வதற்கும் பல நிபந்தனைகளை விதித்தார்.

ஒரு கட்டத்திற்கு பின்னர் என்னால் அதனை சகித்துக்கொள்ள முடியவில்லை. நான் எப்போதும் இசைக்கு முன்னுரிமை கொடுப்பேன். இதனால் சில காலம் சந்தோஷத்தை தொலைத்துவிட்டு பாடல்கள் இல்லாத ஒரு வாழ்க்கையை நடத்த விருப்பம் இல்லை. இதன் காரணமாகவே அவரை பிரிந்தேன் என்றார். உங்களுக்கு பல்வலி வந்தால் அதனை பொறுத்துக் கொள்ள முயல்வீர்கள். அதுவே நம்மை மீறி அதிகரிக்கும்போது அதனை பிடுங்கி எடுப்பதை தவிரி வேறு வழி இல்லை எனக் கூறினார்.

மேலும், கவுதமி மேடம் கேட்டதால் இதை சொல்கிறேன். என்னை திருமணம் செய்தவர் அடிக்கடி இங்கு வருவார். வந்து பேசுவார். ஆனால் திருமணத்துக்கு பின்னர் அவர் என்னை தேவையின்றி கன்ட்ரோல் செய்தார். அதுதான் எனக்கு பிடிக்கவில்லை. எனது அப்பா, அம்மாவை விட்டு பிரிந்து வரச்சொன்னார். அதிகமான டார்ச்சர் குடுத்ததால் அவரைப்பற்றிச் சொல்லும்போது பல்வலி குறித்து பேசினேன். அவருடன் சில மாதங்கள் மட்டுமே வாழ்ந்தேன், தற்போது அவரை பிரிந்து ஒரு ஆண்டு கடந்துவிட்டது. வருங்காலங்களில் திருமணம் செய்வது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. உண்மையை சொல்ல விரும்பினால் அதை நினைத்தாலே பயமாக உள்ளது. அதற்காக ஆண்கள் அனைவரையும் நினைத்து பயம் கிடையாது. ஒரு சிலரைக் கண்டால் பயமாக உள்ளது. இவ்வாறு வைக்கம் விஜயலட்சுமி கூறினார்.

முந்தைய செய்தியை பார்க்க:First Case Of Omicron : சீனாவை அச்சுறுத்திய பிஎப்7 ஒமைக்ரான் கொரோனா இந்தியாவில் நுழைந்தது

முந்தைய செய்தியை பார்க்க:Egg Price Today: முட்டை விலை 10 பைசா உயர்ந்து ரூ.5.40 ஆக நிர்ணயம்