Erode By Election: ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி: ஓ.பி.எஸ்

சென்னை: OPS has said that he will soon announce the candidate to contest the Erode East assembly elections. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரைவில் வேட்பாளரை அறிவிப்போம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி. கூடிய விரைவில் வேட்பாளரை அறிவிப்போம். ஜெயலலிதா, எம்ஜிஆர் செய்த சேவையினால் பயன்பெற்ற அனைத்து மக்களும் எங்களுடன் இருக்கிறார்கள். அதனால் இந்த தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்.

அதிமுக பொறுத்தவரையில், ஜனநாயக முறையில் சட்ட விதிகளுக்கு உட்பட்ட கழக உட்கட்சி தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக நானும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டோம். ஒன்றரை கோடி தொண்டர்கள் பால் கழக சட்ட விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்பட்டோம். அதுதான் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மூலம் அதிகாரப் பூர்வமான பதவியாக நிலை கொண்டு இருக்கிறது. ஆகவே நாங்கள் இருவரும் சேர்ந்து கையொப்பம் இட்டால் தான் இரட்டை இலை கிடைக்க வேண்டிய சூழல் இருக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், எடப்பாடி பழனிச்சாமி தாமாக சுயமாகக் கழக சட்ட விதிகளின் படி இல்லாமல் சட்ட விரோதமாகக் கூட்டப்பட்ட பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக அறிவித்தார் தற்போது அது இல்லை. இந்த சூழ்நிலையில் தாமாகவே முன்வந்து இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். உறுதியாக இரட்டை இலை சின்னம் ஒன்றரை கோடி தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களுக்குத் தான் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஒன்றிணைய வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகிறார்கள். அதைத்தான் நாங்களும் சொல்லுகின்றோம். பாதை மாறிப் போனால் ஊர் வந்து சேராது. அதை எடப்பாடி பழனிச்சாமி தெரிந்து கொள்ள வேண்டும். ஜெயலலிதா இருக்கும் பொழுது பல கட்சிகளுக்குச் சென்று ஆதரவு தெரிவித்து இருக்கிறார். அப்படி நாங்கள் போவது ஒன்றும் குற்றம் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது குறித்து ஆலோசனை செய்த பிறகு வேட்பாளர் அறிவிக்கப்படும். ஓரிரு நாட்களில் விருப்ப மனு வாங்குவது குறித்து அறிவிக்கப்படும். கூட்டணிக் கட்சியில் இருப்பவர்களும் தேர்தலில் போட்டியிடுவதற்கு உரிமை இருக்கிறது. அது அவர்கள் விருப்பம் எனவும் அவர் தெரிவித்தார்.