Tamilnadu : கர்நாடகம், மகாராஷ்டிராவைப் போல தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியை பிடிக்குமா?

annamalai bjp

சென்னை: Tamilnadu politics : கர்நாடகம், மகாராஷ்டிராவைப் போல தமிழ்நாட்டிலும் பாஜக ஆட்சியை பிடிக்குமா? என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

கர்நாடகத்தில் 2018-ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், மஜத 37 தொகுதிகளும் வெற்றி பெற்றன. இதனையடுத்து இருகட்சிகளும் கூட்டணி அமைத்து எச்.டி. குமாரசாமி தலைமையில் ஆட்சி பிடித்தது. 2019-ஆம் ஆண்டு ஆபரேஷன் கமலாவின் மூலம் காங்கிரஸ் கட்சியிலிருந்து 13 எம்.எல்.ஏக்கள், மஜதவில் 3 எம்.எல்.ஏக்கள், ஒரு சுயேச்சை ஆகியோரின் ஆதரவுடன் கர்நாடகத்தில் பி.எஸ். எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சியை பிடித்தது.

அதே போல தற்போது மகராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவின் தலையிலான சிவசேனைக் கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 40 பேரின் உதவியுடன் ஆபரேஷன் கமலா திட்டதின் மூலம் பாஜக அம்மாநிலத்தில் கூட்டணி அரசை அமைத்துள்ளது.
இந்த நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டில் நடைபெறும் திமுக ஆட்சியை அகற்றிவிட்டு, பாஜகவின் ஆபரேஷன் கமலா திட்டத்தில் ஆட்சியை பிடிக்குமா? என்று பரவலாக கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் கர்நாடகம், மகாராஷ்டிராவைப் போல தமிழ்நாட்டிலும் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி, பாஜக ஆட்சியை அமைக்க முடியுமா? என்று அண்மையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மாக்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாட்டின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டின் பாஜக தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான கே. அண்ணாமலை பதவி ஏற்றபிறகு அவர் ஆளும் கட்சியான திமுகவின் பல்வேறு திட்டங்களையும், ஆட்சியையும் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இது அரசியலில் மட்டுமின்றி, மக்களிடையேயும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அண்மைக் காலமாக அவர் கலந்து கொள்ளும் கூட்டங்களிலும், மக்கள் அதிகம் கூடி வருகின்றனர். இதனால் அவர் தலைமையில் பாஜக அல்லது கூட்டணியில் ஆட்சியை அமைக்க முடியுமா என்று அக்கட்சியின் மேலிடம் ஆராய்ந்து வருகிறது. அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளதும் அதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.

ஆனால் தேசிய அளவில் தமிழ்நாட்டின் அரசியலையும், மற்ற மாநிலங்களில் அரசியலையும் ஒப்பிட முடியாது. கர்நாடகம், மகாராஷ்டிராவில் தொடர்ந்து காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆட்சியே தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இரு மாநிலங்களிலும் இடை இடையே மஜத, சிவசேனை போன்ற மாநிலக் கட்சிகளின் ஆட்சிகள் நடைபெறுள்ளன‌. ஆனால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சிக்கு பிறகு சி.என். அண்ணாதுரையின் தலைமையில் திமுகவின் ஆட்சி மலர்ந்த பிறகு, தற்போது வரை தேசியக் கட்சிகள் ஆதிக்கம் செலுத்த முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் அதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் தற்போது பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்தாலும், வேறு கட்சிகளில் இருந்து எம்.எல்.ஏக்களை இழுப்பது சாத்தியப்படுமா? என்பது தெரியவில்லை.திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் உள்ள எம்.எல்.ஏக்கள், அதிக அளவில் விலகி வந்து பாஜகவில் இணைவார்களா அல்லது ஆதரவு தெரிவிப்பார்களா என்பதும் கேள்விக் குறியாக உள்ளது. இரு கட்சிகளிலும் உள்ள எம்.எல்.ஏக்கள் தலைமைக்கு கட்டுப்பட்டவர்களாக இருப்பதால் அதற்கான‌ சாத்தியம் குறைவாகவே உள்ளதாக தெரிகிறது. எனவே கர்நாடகம், மகாராஷ்டிராவைப் போல தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்கும் கனவு பாஜக கட்சிக்கு இருக்குமேயானால் அது தற்போதைக்கு கானல் நீராகவே இருக்கும் எனத் தோன்றுகிறது.