KP Munusamy Says: பா.ம.க.வுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை: கே.பி.முனுசாமி அதிரடி

சென்னை: புதுவையில் சமீபத்தில் நடைபெற்ற பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் (KP Munusamy Says) அ.தி.மு.க. தற்போது பிளவுபட்டுள்ளது, இதனால் பா.ம.க.வுவுக்க சிறந்த எதிர்காலம் இருக்கிறது என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருந்தார். இவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இல்லை என்றால் பா.ம.க. என்ற கட்சியே யாருக்கும் தெரிந்திருக்காது. அ.தி.மு.க.வின் தயவு காரணமாகத்தான் பா.ம.க.வுக்கு அங்கீகாரம் கிடைத்து என்றார்.

இவருக்கு பதில் அளித்து பேசிய பா.ம.க. செய்தி தொடர்பாளர் வக்கீல் பாலு, அ.தி.மு.க. பிரிந்துள்ளது சின்ன குழந்தைகளுக்கு கூட தெரியும் என்றார். கடந்த 1996ம் ஆண்டு அ.தி.மு.க. பலவீனப்பட்டு இருந்தபோது உயிரூட்டியதே பா.ம.க. என்றார்.

இந்நிலையில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியதாவது: பா.ம.க.வின் பேச்சுக்கு பதில் சொல்லி எங்களது சக்தியையும், நேரத்தையும் வீணடிக்க விரும்பவில்லை. அ.தி.மு.க. லட்சியமே வேறு, நாங்கள் எங்களது லட்சியத்தை நோக்கி பயணம் செய்து வருகிறோம். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் வெல்வதே எங்களது லட்சியம். அப்போதுதான் அ.தி.மு.க.வின் பலம் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.