Erode by-election: ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டி: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை: O.Panneerselvam said that we will contest on behalf of AIADMK in the Erode East constituency by-election. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிடப்போவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து இடைத்தேர்தலில் களமிறங்க அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. மேலும் யாரை களமிறக்குவது என அந்தந்த கட்சிகள் மும்முரமாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.

திமுக கூட்டணி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கி அறிவித்தது. இதனைத்தொடர்ந்து, அதிமுகவும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் சென்னை பசுமை வழிச்சாலையில் இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது , ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக எங்கள் தரப்பு போட்டியிடுகிறது. இரட்டை இலை சின்னத்திற்கான முழு உரிமை எங்களுக்கு உள்ளது. இரட்டை இலை சின்னத்திற்காக ஒருங்கிணைப்பாளராக நான் கையெழுத்திடுவேன் என்று கூறினார்.

ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை தான் தற்போது வரை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. வரும் 2026ம் ஆண்டு வரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட தொண்டர்கள் அனுமதி அளித்துள்ளனர். அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதே தொண்டர்களின் கோரிக்கையாக உள்ளது. எங்களிடம் கூட்டணி கட்சிகள் பேசிக் கொண்டு தான் உள்ளன. அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்பதே எனது விருப்பம்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுவது யார் என்பது குறித்து நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். சசிகலா இதுவரை என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் உறுதியாக ஆதரிப்போம். எடப்பாடி பழனிசாமி தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம்.உள்ளாட்சி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்க எடப்பாடி தான் காரணம். இரட்டை இலை சின்னம் முடங்க நான் காரணமாக இருக்க மாட்டேன். இரட்டை இலை சின்னம் ஒதுக்காவிட்டால் தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிடுவோம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.