Erode By Election: ஈரோட்டில் வாக்குச்சாவடிகள் பிரிக்கப்படுமா? தலைமை தேர்தல் அதிகாரி பரபரப்பு தகவல்

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் (Erode By Election) தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ம் தேதி தொடங்க உள்ளது.

இதற்கான முன்னேற்பாடுகள் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு இடைத்தேர்தலின் போதும் பதட்டமான வாக்குச்சாவடிகள் வரையறுப்பது வழக்கமாகும். அதே போன்று ஈரோடு தொகுதியிலும் பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகளை கண்டறிவதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டிருக்கிறேன்.

மேலும் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்ட உடன் பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம். தற்போதைய நிலையில் பதட்டம் நிறைந்த பகுதிகள் பற்றிய விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது.
கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது கொரோனா பெருந்தொற்று வழிகாட்டு நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டது. அதன்படி ஆயிரத்திற்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்ட வாக்குச்சாவடிகள் இரண்டாக பிரிக்கப்பட்டது. அதாவது ஒரே வளாகத்தில் துணை வாக்குச்சாவடி ஏற்படுத்தப்பட்டு ஒரு வாக்குச்சாவடியில் 600 வாக்காளர்கள் என்ற வகையில் பிரிக்கப்பட்டது.

தற்போதைய நிலையில் கொரோனா தொற்று குறைந்து இயல்பு நிலை திரும்பியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆயிரத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் இருந்தாலும் ஒரே வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். இவ்வாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.