Bjp President Jp Nadda Speech: தமிழகம் பாதுகாப்பாக இல்லை: பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா

கோவை: தமிழகம் தற்போது பாதுகாப்பானதாக இல்லை என்று தேசிய பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா (Bjp President Jp Nadda Speech) கோவை பொதுக்கூட்டத்தில் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று (டிசம்பர் 27) கோவைக்கு வருகை புரிந்தார். அவரை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., மற்றும் நிர்வாகிகள் பலரும் வரவேற்றனர்.

இந்நிலையில், பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது, பிரதமர் மோடி தலைமையில் இந்தியா முன்னேறி சென்று கொண்டிருக்கிறது. தற்போது நாடு ஒரு பாதுகாப்பான கைகளில் உள்ளது. ஆனால் தமிழகம் பாதுகாப்பு இல்லாத நிலையே உருவாகியுள்ளது என்றார்.

மேலும், இந்தியா வலிமையுடன் முன்னேறி வருகிறது. விரைவில் உலகின் தலைசிறந்த தலைமையாக மாறும். பொம்மைத் தொழிலில் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக நாம் திகழ்ந்து வருகிறோம். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ரசாயனத்துறை, மருந்துத்துறையிலும் நாம் மிக சிறப்பாகச் செயல்பட்டு வருகிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் வரவுள்ள பாராளுமன்ற தேர்தல் மட்டுமின்றி தமிழக சட்டசபை தேர்தலிலும் மாற்றம் நிகழும். நம்பிக்கையான முன்னேற்றத்தை பார்த்துக் கொண்டே இருக்கின்றோம். யாரும் பட்டினியாக இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் அன்னை யோஜனா திட்டத்தைக் கொண்டு வந்துள்ளோம். இவ்வாறு ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.