AIADMK General Council meeting judgement: அதிமுகவில் பழைய நிலையே நீடிக்கும்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

chennai-high-court
சென்னை ஐகோர்ட்டின் நிரந்தர நீதிபதிகளாக 9 பேர் இன்று பதவி ஏற்பு

சென்னை: AIADMK General Council meeting judgement: அதிமுகவில் ஜூன் 23ம் தேதி இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில், கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் நீக்கப்பட்டு, இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

இதற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு ஆகஸ்ட் 10 மற்றும் 11 ஆகிய இரு நாட்கள் விசாரிக்கபட்டது.

அதிமுக பொதுக்குழு குறித்து ஜூன் 23ம் தேதியே அறிவிக்கப்பட்டுவிட்டது என்றும், ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் காலாவதியானதால், தலைமைக்கழக நிர்வாகிகள் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிட்டது. ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக இருக்கும்போது, ஒரு ஆண்டுக்கு முன்னரே எப்படி பதவிகள் காலாவதியானது என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில், கடந்த 2017ம் ஆண்டு நியமனத்தை கவனத்தில் எடுத்துக்கொள்ள முடியாது எனவும், ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல் நடைமுறைகளுக்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் பதவி காலாவதியாகிவிட்டதாகவும் கூறியது 2,432 பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமையை விரும்புவதாக கடிதம் வழங்கியுள்ளதாகவும் வாதிட்டது.

இதற்கு ஓ.பன்னீர் செல்வம் தரப்பில், கடந்த ஜூன் 23ம் தேதி ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்காவிட்டால், பதவிகள் காலாவதியாகிவிடும் என எந்த தீர்மானத்திலும் இல்லை என வாதிட்டது. மேலும் பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவை தொண்டர்களின் விருப்பமாக கருத முடியாது எனவும் அவர்கள் வாதிட்டனர்.

பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன் தேதிக் குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார்.
இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. நீதிபதி ஜெயந்திரன் வழங்கிய தீர்ப்பில், அதிமுகவில் ஜூன் 23ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி இணைந்துதான் பொதுக்குழு கூட்ட வேண்டும் எனவும் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.