AIADMK Nomination papers from today: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்: இன்று முதல் அதிமுக விருப்பமனு

ஈரோடு : Those who want to contest on behalf of AIADMK in the Erode East Assembly Constituency by-election can submit their nomination form from today till 26th. ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விரும்பம் உள்ளவர்கள் இன்று முதல் வருகிற 26-ஆம் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம் என இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி அன்று நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மாரடைப்பால் காலமானதை அடுத்து இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஜனவரி 31ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கல் செய்ய பிப்ரவரி 7-ம் தேதி கடைசி நாளாகும், மேலும் அவை பிப்ரவரி 8-ம் தேதி வேட்பு மனு பரிசீலனை செய்யப்படும். வேட்பாளர்கள் வேட்புமனுவை திரும்பப் பெற பிப்ரவரி 10-ம் தேதி வரை அவகாசம் உள்ளது. பிப்ரவரி 27-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்து மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும். முடிவுகள் அறிவிக்கப்படும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இதனைத்தொடர்ந்து இடைத்தேர்தலில் களமிறங்க அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. மேலும் யாரை களமிறக்குவது என அந்தந்த கட்சிகள் மும்முரமாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த தேர்தலில் திமுக கூட்டணியில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகள் தேர்தலில் போட்டியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இடைத்தேர்தலில் பாஜகவும் களம் இறங்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியது. இந்த தேர்தலில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இருவரும் தனித்தனி அணியாக பிரிந்து போட்டியிடுவதால் இரட்டை இலை முடக்கப்பட்டு, வாக்குகள் சிதறும் நிலையும் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விரும்பம் உள்ளவர்கள் இன்று முதல் வருகிற 26-ஆம் தேதி வரை விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி அன்று நடைபெற உள்ளதால், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விரும்பம் உள்ள கழக உடன்பிறப்புகள், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் திங்கள் கிழமையான இன்று முதல் 26-ஆம் தேதி வியாழக்கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை, விண்ணப்பக் கட்டணத் தொகையாக 15,000/- ரூபாயை செலுத்தி, விருப்ப மனு விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து உடனடியாக வழங்க வேண்டும் என்வும் கேட்டுக்கொள்வதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.