A State Central Committee Meeting: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அண்ணாமலை தலைமையில் ஆலோசனை

வருகின்ற 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சென்னை கமலாலயத்தில் இன்று (டிசம்பர் 14) தமிழக பா.ஜ.க., மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தலைமையில் மாநில மைய குழு கூட்டம் ஒன்று நடந்துள்ளது.

மத்தியில் பா.ஜ.க., அரசு அமைந்து கடந்த 8 ஆண்டுகளாக மோடி பிரதமராக பதவியில் உள்ளார். மேலும் வருகின்ற 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க.வே ஆட்சியை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு தற்போதில் இருந்தே பேசத்துவங்கியுள்ளது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேலையில் ஈடுபடத் அனைத்து மாநிலத் தலைவர்கள் மற்றும் தேசிய நிர்வாகிகளுக்கும் பா.ஜ.க., தலைமை வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க., தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று காலை மாநில மைய குழு கூட்டம் தொடங்கி நடைபெற்றது. அதன்படி தமிழக பா.ஜ.க., தலைவர் கே.அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பா.ஜ.க., மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதன்படி இக்கூட்டத்தில் வருகின்ற 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எவ்வாறு செயல்படுவது மற்றும் பூத் கமிட்டி, கட்சியின் வளர்ச்சி பணிகள் உள்ளிட்டவைகள் விரிவாக பேசப்பட்டுள்ளது. இக்கூட்டம் காலை 11 மணியளவில் தொடங்கி மதியம் வரையில் நடைபெற்றுள்ளது. மேலும் தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் அரசியல் சூழ்நிலையும் விரிவாக விவாதிக்கப்பட்டதாக பா.ஜ.க.,வினர் கூறியுள்ளனர்.

ஏற்கனவே கடந்த சட்டமன்ற தேர்தலின்போது அ.தி.மு.க.,வுடன் பா.ஜ.க., கூட்டணி அமைத்து 4 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையில் அ.தி.மு.க.வில் உட்கட்சி பிரச்சனை நிலவி வரும் நிலையில் மீண்டும் பா.ஜ.க., கூட்டணி அமைத்து போட்டியிடுமா அல்லது பிற கட்சிகளை ஒன்றிணைத்து தேர்தலில் நிற்குமா என்ற கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.