Vice President greets: சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் துணைத் தலைவர் வாழ்த்து

புதுடெல்லி: Vice President greets the nation on the eve of Independence Day: குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை இந்த ஆண்டு இந்தியா கொண்டாடுகிறது. இதனையொட்டி நாடு முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன்பே சுதந்திர தினக் கொண்டாட்டத்தை ஆரம்பித்துவிட்டது. இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரின் வீட்டிலும் சுதந்திரக் கொடியை ஏற்றிவைக்க பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார். இதற்கிணங்க மக்கள் சுதந்திரக் கொடியை ஏற்றி வருகின்றனர். மேலும் நாடு முழுவதும் உள்ள நினைவு சின்னங்கள், அரசு அலுவலகங்களில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்து வருகின்றன.

இந்நிலையில் சுதந்திர தினத்தையொட்டி, நாட்டுமக்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “76வது சுதந்திர தினத்தின் மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில் நமது நாட்டு மக்களுக்கு எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான முன்னேற்றத்தை நாம் இன்று கொண்டாடும் போது, நமது சுதந்திரம் எவ்வளவு கடினமாகப் போராடி கிடைத்தது என்பதை மறந்துவிடக் கூடாது. ஒடுக்குமுறையான காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றுத்தந்த தியாகமும், வீரமும் மிக்க சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் ஒரு சந்தர்ப்பம் சுதந்திர தினம்.

இந்த நாள் நவீன இந்தியாவைக் கட்டியெழுப்புபவர்களுக்கு நமது நன்றியைத் தெரிவிக்கும் ஒரு சந்தர்ப்பமாகும், அவர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு, நிலையான மற்றும் வலுவான குடியரசின் அடித்தளத்தை அமைத்தது. இன்று, இந்தியா அனைத்து மட்டத்திலும் வளர்ச்சியின் பாதையில் முன்னேறி, ஆற்றல் நிறைந்த நாடாக உள்ளது.

விடுதலையின் அமிர்தப்பெருவிழாவைக் கொண்டாடும் வேளையில், தேசபக்தி, தியாகம் மற்றும் சேவை ஆகிய நற்பண்புகளை இளைய தலைமுறையினருக்கு ஊக்குவிப்பதற்கு, நமது மாபெரும் புரட்சியாளர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் எழுச்சியூட்டும் கதைகளை நினைவு கூர்ந்து மீண்டும் நன்றி சொல்ல வேண்டிய நேரம் இது.

இந்த சுதந்திர தினத்தன்று, அரசியலமைப்பு விழுமியங்களின் நாகரீக நெறிமுறைகளை நிலைநிறுத்துவதற்கான நமது உறுதிமொழியை புதுப்பித்து, அனைவரையும் உள்ளடக்கிய, முற்போக்கான மற்றும் வளமான இந்தியாவைக் கட்டமைக்க உறுதி மேற்கொள்வோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.