Nupur Sharma : நுபுர் ஷர்மாவின் தலையை துண்டிக்க அழைப்பு விடுத்தவர் கைது

Salman Chishti : நூபுர் ஷர்மாவின் தலையை துண்டிக்க வெளிப்படையாக முன்வந்த அஜ்மீர் ஷெரீப் தர்காவின் காதிம் சல்மான் சிஷ்டி, ராஜஸ்தான் காவல்துறையினரால் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.

ராஜஸ்தான்: Nupur Sharma : அஜ்மீர் ஷெரீப் தர்கா காதிம் சல்மான் சிஷ்டியை ராஜஸ்தான் போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர். அஜ்மீர் மாவட்ட ஏஎஸ்பி விகாஸ் சங்வான், முஹம்மது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து, பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்ய‌ப்பட்ட தலைவர் நுபுர் சர்மாவின் தலையை துண்டிக்க காதிம் சல்மான் சிஷ்டிவெளிப்படையாக அழைப்பு விடுத்ததாக தெரிவித்தார்.

இஸ்லாத்தை நிறுவிய முஹம்மது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நூபுர் ஷர்மாவை, அவமதிக்கும் வகையில் சையத் சல்மான் சிஷ்டி ஒரு காணொலியை வெளியிட்டார். அதில் நுபுர் ஷர்மாவை தலையை துண்டித்து கொல்லவும் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் குவாஜா சாஹேப் மற்றும் முகமது சாஹேப் ஆகியோரின் புகழுக்கு இந்த பாஜக தலைவர் களங்கம் ஏற்படுத்தி உள்ளார். இந்த பணியை செய்த நூபுர் ஷர்மாவின் தலையை துண்டித்து எனது வீட்டிற்கு கொண்டு வருபவர்களுக்கு எனது வீடு, சொத்துக்களை தருவதாகச் சிஷ்டி தெரிவித்துள்ளார்.

இந்த காணொலி வைரலானதையடுத்து சிஷ்டி மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். இடைநீக்கம் செய்ய‌ப்பட்ட பாஜக தலைவர் நுபுர் சர்மாவுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் காணொலி வெளியிட்டத்தின் அடிப்படையில் அஜ்மீர் ஷெரீப் தர்காவின் காதிம், சையத் சல்மான் சிஷ்டியை நள்ளிரவு போலீஸார் கைது செய்த‌தாக அஜ்மீர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விகாஸ் சங்வான் தெரிவித்தார்.

அந்த காணொலியை சையத் சல்மான் சிஷ்டி குடிபோதையில் எடுத்துள்ளார். இது குறித்து, தர்கா மற்றும் அஞ்சுமன் நிர்வாகிகளிடம் போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் வன்முறையை தூண்டும் வகையில் காணொலி வெளியிட்ட சிஷ்டி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.