PM Narendra Modi Chennai visit : பிரதமர் நரேந்திரமோடி சென்னைக்கு வருவதையொட்டி பாதுகாப்பு பணியில் 22 ஆயிரம் போலீசார்

சென்னை : PM Narendra Modi’s Chennai visit, 22,000 policemen on security duty : பிரதமர் நரேந்திரமோடி சென்னைக்கு வருவதையொட்டி 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மாமல்லபுரத்தில் நடைபெறும், 44-வது சர்வதேச ‘செஸ் ஒலிம்பியாட்’ (44th International Chess Olympiad) போட்டியை தொடக்கி வைப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (ஜூலை 28) சென்னை வருகிறார். சென்னை, ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் தொட‌க்க விழாவில், போட்டியை தொடங்கி வைக்கிறார்.

நிகழ்ச்சியில், ஆளுந‌ர் ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் (Chief Minister M. K. Stalin), மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் சர்வதேச விளையாட்டு வீரர்கள் பலர் பங்கேற்க உள்ளனர். சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி, விமான நிலையத்தில் இருந்து, அடையாறு ஐஎன்எஸ்., கடற்படை தளத்திற்கு, ஹெலிகாப்டரில் வந்து இறங்குகிறார். அங்கிருந்து சாலை வழியாக‌ நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு செல்கிறார்.

இதையொட்டி சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் (Chennai Police Commissioner Shankar Jiwal) தலைமையில், 4 கூடுதல் காவல் ஆணைய‌ர்கள், 7 இணை காவல் ஆணைய‌ர்கள், 26 துணை காவல் ஆணைய‌ர்கள் உள்ளிட்ட 22 ஆயிரம் போலீசார், ஐந்தடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை தொடர்ந்து, கிண்டி ஆளுநர் மாளிகையில், பிரதமர் இரவு தங்குகிறார். 29ம் தேதி, அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.

பிரதமரின் வருகையையொட்டி ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கம் (Jawaharlal Nehru Indoor Sports Stadium), அண்ணா பல்கலைக்கழகம், ஆளுந‌ர் மாளிகை, சென்னை விமானம் நிலையம், அடையாறு கடற்படை தளம் ஆகிய இடங்கள் உள்பட சென்னையில் பரவலாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மேலும், பிரதமர் செல்லும் வழித்தடங்களிலும் தீவிரமான‌ சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகள் நடந்து வருகின்றன.

சென்னையில் உள்ள தனியார் தங்கும் விடுதிகள், நட்சத்திர ஹோட்டல்களிலும் (star hotels)சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சந்தேகப்படும்படியான‌ நபர்கள் மற்றும் வெளி ஊர்களிலிருந்து வந்து தங்கி உள்ளனரா என, போலீசார் சல்லடை போட்டு தேடி வருகின்றனர். மேலும் ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மின் வாரிய தலைமை அலுவலகம் (Chennai Electricity Board Head Office) அமைந்துள்ள‌ 10 மாடி கட்டடத்தின் மேல் தளத்தில் இருந்து, வான்வெளி கண்காணிப்பு பணியில், போலீசார் ஈடுபட்டு உள்ளனர். சென்னை அண்ணா சாலையில் 10 மாடி கட்டடம் உடைய மின் வாரிய தலைமை அலுவலகம் உள்ளது. அதன் மேல்தளத்தில் இருந்து அண்ணா சாலை, எழும்பூர், புதுப்பேட்டை உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டு கண்காணிக்க‌ முடியும். இதற்கான ஏற்பாடுகள் குறித்து போலீசார், மின் வாரிய அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினர். இதேபோல் அண்ணா சாலையில் உள்ள மிக உயரமான எல்ஐசி கட்டடத்தின் மேல் பகுதியில் இருந்தும் கண்காணிப்பை மேற்கொள்ள‌ திட்டமிட்டுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி, சென்னையில் தங்கியிருக்கும் 2 நாள்களிலும் ட்ரோன்’கள் (Drones), இதர ஆளில்லா வான்வழி விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. தடையை யார் மீறினாலும் அவர்கல் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை எச்சரித்துள்ளது.