Flight: நடுவானில் 3 விமானங்களில் திடீரென ஏற்பட்ட இன்ஜின் கோளாறு

flight
நடுவானில் 3 விமானங்களில் திடீரென ஏற்பட்ட இன்ஜின் கோளாறு

Flight: மத்திய சிவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குநரகம் (டி ஜி சி ஏ), 3 விமானங்களில் நடுவானில் திடீரென ஏற்பட்ட இன்ஜின் கோளாறு சம்பவங்களை தனித்தனியாக விரிவாக விசாரித்து வருகிறது.

இம்மாதம் 19ம் தேதியன்று, ஏர்பஸ் ஏ320நியோ ரக ஏர் இந்தியா விமானம் ஒன்று பெங்களூர் செல்வதற்காக மும்பை விமான நிலையத்தில் இருந்து கிளம்பியது. பறக்கத்தொடங்கிய 27 நிமிடங்களில், அந்த விமானத்தின் இன்ஜின் திடீரென்று பழுதடைந்து நின்றுவிட்டது.

விமானத்தின் ஒரு எஞ்சின் வேலை செய்யவில்லை. நிலைமையை சுதாரித்த விமானி, விமானத்தை பாதுகாப்பாக மும்பை விமான நிலையத்திலேயே தரையிறக்கினார்.

விமானம் மிகவும் பாதுகாப்பாக ஒரு இன்ஜின் உதவியுடன் மும்பைக்கு திரும்பி வந்து தரையிறங்கியது. கடந்த 2 மாதங்களில், இதுபோன்ற சம்பவம் 3 முறை நடுவானில் நடந்துள்ளது. இந்த விமான இன்ஜின் கோளாறு தொடர்பாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குநரகம் (டி ஜி சி ஏ) விசாரணையை தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இந்த சிஎப்எம் இன்ஜின் மூலம் இயக்கப்பட்ட விமானங்களில் தான் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ‘சிஎப்எம் இன்டர்நேஷனல் லீப்’ இன்ஜின் என்பது சிஎப்எம் இன்டர்நேஷனல் மூலம் தயாரிக்கப்பட்ட உயர்-பைபாஸ் டர்போ பேன் ஆகும்.

இது ‘அமெரிக்கன் ஜிஈ ஏவியேஷன்’ மற்றும் ‘பிரெஞ்சு சப்ரான் ஏர்கிராப்ட்’ இன்ஜின்களுக்கு இடையேயான 50-50 கூட்டு முயற்சியாகும்.லீப் எனப்படும் ‘முன்னணி விளிம்பு விமான உந்துவிசை’ இன்ஜின் மூலம் விமானம் இயங்கும். போயிங் 737 ஜெட் விமானங்களுக்கான பிரத்யேக எஞ்சின் விநியோகஸ்தராக சிஎப்எம் உள்ளது. முன்பு, பிராட் & விட்னி தயாரித்த என்ஜின்கள் அடிக்கடி கோளாறுகளை சந்தித்தன. இதன் காரணமாகவே, சிஎப்எம் இன்டர்நேஷனல் லீப் இன்ஜின்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த இன்ஜின்களை கொண்டு இயக்கப்பட்ட விமானங்களில் இன்ஜின் கோளாறு ஏற்பட்டது.

இதனால் விமானிகள் வேறு வழியின்றி வேண்டுமென்றே இரண்டு என்ஜின்களில் ஒன்றை நடுவானில் அணைத்தனர். இதன் காரணமாக, ஒரேயொரு இன்ஜினின் ஆற்றலை கொண்டே விமானம் இயக்கப்பட்டது.

ஏர் இந்தியாவிற்கு சொந்தமான இரண்டு ஏர்பஸ் – ஏ32நியோ ஜெட் விமானங்கள் மற்றும் ஸ்பைஸ்ஜெட்டுக்கு சொந்தமான ஒரு போயிங் – 737மேக்ஸ் விமானம் என மொத்தம் 3 விமானங்களில் இத்தகைய இன்ஜின் கோளாறு ஏற்பட்டது. இதனால் நடுவானில் விமானிகள், இரண்டு என்ஜின்களில் ஒற்றை இன்ஜின் மூலம் விமானங்களை பத்திரமாக தரையிறக்கியுள்ளனர்.

இம்மாதம் 19ம் தேதியன்று மும்பையிலிருந்து பெங்களூர் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம், ஏஐ639, மே 3ம் தேதியன்று சென்னையிலிருந்து மே.வங்கம் துர்காபூருக்கு இயக்கப்பட்ட ஸ்பைஸ்ஜெட் 737 மேக்ஸ் விமானம் ஆகியவற்றில் இன்ஜின் கோளாறு ஏற்பட்டது.

இதுகுறித்து ஏர் இந்தியா கூறுகையில், நாங்கள் பயணிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குகிறோம். எங்கள் பணியாளர்கள் இதுபோன்ற பிரச்சனைகளை சிறப்பாக கையாள நன்கு பயின்றவர்கள். எங்கள் பணியளர்கள் இந்த சம்பவம் குறித்து ஆராய்ந்து வருகின்றனர் என தெரிவித்துள்ளது. இதற்கிடையே, விமான பணிமனை ஒன்றை இந்தியாவில் நிறுவ பிரெஞ்சு சப்ரான் ஏர்கிராப்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதையும் படிங்க: Caught On Camera: பராமரிப்பாளரின் விரலை கடித்து துப்பிய சிங்கம்