Vice Presidential Election : குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்

இந்த பதவிக்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் சார்பில் யாரை அறிவிப்பார்கள் என்ற ஆவல் எழுந்துள்ளது.

Image Credit : Twitter.

தில்லி: Vice Presidential Election of India : குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (ஜூலை5) தொடங்க உள்ளது.

நாட்டின் துணைக் குடியரசு தலைவராக தற்போது வெங்கையா நாயுடு உள்ளார். இவரது பதவிக் காலம் ஆக. 10-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இவரைத் தொடர்ந்து அடுத்த குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆக. 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுவை ஜூலை 5-ஆம் தேதி தொடங்கி, ஜூலை 19-ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம். ஜூலை 20-ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். ஜூலை 22-ஆம் தேதி வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும்.

வேட்பு மனுவை குறைந்த பட்சம் 20 எம்.பி.க்கள் முன்மொழியவதோடு, ஆதரிக்கவும் வேண்டும். ஒரு எம்.பி. ஒரு வேட்பு மனுவைத்தான் முன்மொழிய வேண்டும். ஆதரிக்க வேண்டும். ஒரு வேட்பாளர் 4 மனுக்களை தாக்கல் செய்யலாம். வைப்பு தொகையாக ரூ. 15 ஆயிரம் செலுத்த வேண்டும்.

குடியரசு தலைவர் தேர்தலில் எம்.பி.க்கள் மட்டுமின்றி எம்.எல்.ஏக்கள் வாக்களிப்பர். ஆனால் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எம்.பி.க்கள் மட்டுமே வாக்களிப்பர். இதனால் இந்தத் தேர்தல் நாடாளுமன்றத்தில் மட்டுமே நடைபெறும். குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நாள் தொடங்கியுள்ள நிலையில் எந்த முக்கிய கட்சிகளும் தங்களின் வேட்பாளர்களை இதுவரை அறிவிக்காமல் உள்ளன.

இதனால் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் சார்பில் யாரை அறிவிப்பார்கள் என்ற ஆவல் எழுந்துள்ளது. குடியரசு துணைத் தலைவராக பதவி வகிப்பவர், மாநிலங்களவைத் தலைவராக பதவி வகிப்பார்.