Janjatiya Gaurav Diwas: பள்ளிக் கல்லூரிகளில் 15ம் தேதி பழங்குடியினர் கௌரவ தினக் கொண்டாட்டம்

புதுடெல்லி: 15th tribal honor day celebration in schools and colleges. நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் ‘பழங்குடியினர் கௌரவ தின’ (ஜன்ஜாதிய கவுரவ் திவஸ்) விழாவை சிறப்பாகக் கொண்டாட கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் தலைமையில் கல்வி அமைச்சகம், நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், திறன் மேம்பாடு மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் ‘பழங்குடியினர் கௌரவ தின’ ( ஜன்ஜாதிய கவுரவ் திவஸ்) விழாவை சிறப்பாகக் கொண்டாடவுள்ளது.

கடந்த ஆண்டு, அரசு நவம்பர் 15-ஆம் தேதியை ‘பழங்குடியினர் கௌரவ தினம்’ (ஜன்ஜாதிய கவுரவ் திவாஸ்) என்று அறிவித்தது. நாடு முழுவதும் உள்ள பழங்குடி சமூகத்தினரால் பகவான் என்று போற்றப்படும் பிர்சா முண்டாவின் பிறந்தநாள் நவம்பர் 15 ஆகும்.

பிர்சா முண்டா ஒரு சுதந்திரப் போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் நாட்டின் மதிப்பிற்குரிய பழங்குடியினத் தலைவர் ஆவார். அவர் பிரிட்டிஷ் காலனித்துவ அரசின் சுரண்டல் முறைக்கு எதிராக துணிச்சலாகப் போராடியதால், வாழ்நாள் புகழ்பெற்ற நபராக ஆனார். அவர் பெரும்பாலும் ‘பகவான்’ என்றே குறிப்பிடப்பட்டார்.

பழங்குடியினருக்கு “உல்குலன்” (கிளர்ச்சி) அழைப்பு விடுத்து, பழங்குடியின இயக்கத்தை ஒழுங்கமைத்து வழி நடத்தினார். பழங்குடியினரின் கலாச்சார வேர்களைப் புரிந்து கொள்ளவும், ஒற்றுமையைக் கடைப்பிடிக்கவும் அவர் ஊக்குவித்தார்.

பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பை நினைவுகூரும் வகையில் மத்திய கல்வி அமைச்சகம், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு (ஏஐசிடிஇ) பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), மத்திய பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள், பிற உயர்கல்வி மற்றும் திறன் நிறுவனங்களுடன் இணைந்து ‘ஜன்ஜாதிய கவுரவ் திவாஸ்’ கொண்டாடுகிறது.

நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் ‘சுதந்திரப் போராட்டத்தில் பழங்குடியின மாவீரர்களின் பங்களிப்பு’ என்ற தலைப்பில் விவாதப் போட்டி, சமூக செயல்பாடுகள் போன்ற ஏராளமான நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த கொண்டாட்டங்களின் போது பகவான் பிர்சா முண்டா மற்றும் இதர பழங்குடியினத் தலைவர்கள் சிறப்பிக்கப்படுவார்கள். மேலும் சிறப்பாக செயல்பட்டதற்காக மாணவர்களும் பாராட்டப்படுவார்கள்.

இந்த கொண்டாட்டங்கள் வருங்கால சந்ததியினர் நாட்டிற்காக பழங்குடியின சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை அங்கீகரிக்கவும், அவர்களின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லவும், பழங்குடியினரின் கலாச்சாரம், கலை மற்றும் பழங்குடி பாரம்பரியத்தை பாதுகாக்கவும் ஊக்குவிக்கும்.