India will give a befitting reply if provoked: இந்தியாவை சீண்டினால் தகுந்த பதிலடி கொடுப்போம்: ராஜ்நாத் சிங்

ஜஜ்ஜர்: Rajnath Singh said that if India is offended, we will give a befitting reply. இந்தியாவின் மீது தீய பார்வையை செலுத்தும் எவருக்கும் தக்க பதிலடி கொடுக்க ராணுவம் முழுமையான தயார் நிலையில் இருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டு மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

ஹரியானா மாநிலம், ஜஜ்ஜரில் இன்று நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர், தேச நலன்களைப் பாதுகாப்பதே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது என்றும், எதிர்கால சவால்களிலிருந்து நாட்டைப் பாதுகாக்க ராணுவம் அதிநவீன ஆயுதங்களுடனும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், உபகரணங்களுடனும் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

இந்தியா இப்போது பலவீனமாக இல்லை. நாம் அமைதியை நம்புகிறோம், ஆனால் யாரேனும் நமக்குத் தீங்கு விளைவிக்க முயன்றால், நாம் தக்க பதிலடி கொடுப்போம். நமது வீரர்கள் இதை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளனர். 2016-ல் துல்லியத் தாக்குதல், 2019 பாலகோட் வான்வழித் தாக்குதல் மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தின் போது நமது வீரர்கள் காட்டிய வீரம் ஆகியவை நமது வலிமை மற்றும் தயார்நிலைக்கு சான்றாகும் என்று ராஜ்நாத் சிங் கூறினார்.

இந்தியாவின் உலகளாவிய செல்வாக்கை வெறும் கேட்பவர் என்ற நிலையிலிருந்து வலியுறுத்துபவராக மாற்றியதற்காகப் பிரதமரைப் பாராட்டிய பாதுகாப்பு அமைச்சர், உலகம் இப்போது புது தில்லியை ஆர்வத்துடன் பார்க்கிறது என்றார். அரசின் முயற்சிகளால் இந்தியா இப்போது உலகின் முதல் ஐந்து பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ளது என்பதை எடுத்துக்காட்டிய அவர், வரும் காலங்களில் நாடு முதல் மூன்று இடங்களுக்குள் வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், மாமன்னர் பிருத்விராஜ் செளகான், மராட்டிய வீரர் சத்ரபதி சிவாஜி போன்ற புரட்சியாளர்களிடமிருந்து உத்வேகம் பெற்று, இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்துக்கொண்டே, இந்தியாவின் கனவுகளை நனவாக்க அரசு பாடுபட்டு வருகிறது என்றும் திரு ராஜ்நாத் சிங் உறுதிபட தெரிவித்தார். இந்த ஆண்டு செங்கோட்டை கொத்தளத்திலிருந்து நிகழ்த்திய சுதந்திர தின உரையின் போது பிரதமரால் தொலைநோக்காகக் காணப்பட்ட ‘புதிய இந்தியா’ வின் தீர்மானமான ‘அமிர்த காலத்தின் ஐந்து உறுதிமொழிகள்’ பற்றி அவர் எடுத்துரைத்தார்.

காலனித்துவ மனநிலையிலிருந்து விடுபட, ராஜ்பாத்தின் பெயரை கடமைப் பாதை என்று மாற்றியது, இந்தியா கேட் வளாகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிரமாண்ட சிலை நிறுவியது; மராட்டியப் போர்வீரன் சத்ரபதி சிவாஜியிடமிருந்து ஊக்கம் பெற்ற ஒரு புதிய இந்தியக் கடற்படைக் கொடி, காலாவதியான சுமார் 1,500 பிரிட்டிஷ் காலச் சட்டங்களை நீக்கியது உட்பட பல முயற்சிகளை அரசு எடுத்துள்ளது என்றுபாதுகாப்பு அமைச்சர் கூறினார்.

அண்மையில் பிரதமரால் வெளியிடப்பட்ட, 2023 ஆம் ஆண்டு இந்தியாவின் ஜி-20 தலைவர் பதவிக்கான இலச்சினையில் தாமரை மலர் இருப்பது குறித்த சில தரப்பினரின் கருத்துக்களை நிராகரித்த ராஜ்நாத் சிங், இந்தியாவின் கலாச்சார அடையாளத்துடன் இணைந்த தேசிய மலர் தாமரை என்றார்.

ஜஜ்ஜாரில் பாதுகாப்பு அமைச்சரால் போர்வீரர் மன்னர் பிருத்விராஜ் செளகானின் சிலை திறக்கப்பட்டது. பிருத்விராஜ் செளகானை ஒரு சிறந்த ஆட்சியாளர் என்றும் அவர் ஒரு பெரிய நிலப்பரப்பில் ஆட்சி செய்தவர் மட்டுமல்ல, தைரியம், நீதி, பொது நலன் ஆகியவற்றின் உருவகமாகவும் இருந்தார் என்றும் அவர் குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.