PM Modi: 2030க்குள் இந்தியாவில் 6ஜி சேவை – பிரதமர் மோடி நம்பிக்கை

6g services in india
2030க்குள் இந்தியாவில் 6ஜி சேவை - பிரதமர் மோடி நம்பிக்கை

PM Modi: இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையமான ட்ராய் அமைப்பின் வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கி, ட்ராய் அமைப்பின் அஞ்சல் தலையை வெளியிட்டார். விழாவில் உரையற்றிய பிரதமர் மோடி, ‘இந்திய தொலைத்தொடர்பு துறை வேகமான பாய்ச்சலில் முன்னேறி வருகிறது. தற்போது 3ஜி மற்றும் 4ஜி தொழில்நுட்பங்கள் இயங்கி வரும் நிலையில், அடுத்த சில மாதங்களில் இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் அறிமுகம் ஆகவுள்ளது.

இந்த 5ஜி தொழில்நுட்பம் மூலம் நாட்டில் 450 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் பொருளாதார ஏற்றம் ஏற்படும். 5 ஜி தொழில்நுட்பமானது இணைய சேவை வேகத்தை மட்டும் அதிகரிக்காது. மாறாக வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பையும் அதிகரிக்கும். வேளாண்மை, சுகாதாரம், கல்வி, உட்கட்டமைப்பு மற்றும் லாஜிஸ்டிக்ஸ் ஆகிய துறைகள் இதன் மூலம் மேம்படும். அடுத்தாக 6ஜி அமல்படுத்தும் திட்டத்தை நோக்கி இந்தியா நகர்கிறது. 6ஜி தொழில்நுட்பத்தை செயல்படுத்த தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.

2030ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் 6 ஜி சேவை அமலாகும். முந்தைய ஆட்சிகளில் 2ஜியை விட்டே நகர முடியாத சூழல் நிலவியது. அந்த ஆட்சியின் மோசமான கொள்கை மற்றும் ஊழலே இதற்கு காரணம். ஆனால் தற்போதைய அரசு 4ஜி, 5ஜி தொடர்ந்து 6ஜி என முன்னேறி செல்கிறது. இந்த மாற்றத்தை நிகழ்த்தி காட்ட ட்ராய் அமைப்பு பெரும் பங்களிப்பை மேற்கொண்டுள்ளது. சந்தையின் தேவைக்கு ஏற்ப அரசு கொள்கை முடிவுகளை மாற்றம் செய்து நடைமுறைப்படுத்துகிறது.

இதன் காரணமாக இந்திய தொலைத்தொடர்பு துறையில் அந்நிய நேரடி முதலீடு கடந்த 8 ஆண்டுகளில் 1.5 மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியாவில் மொபைல் உற்பத்தி மையங்கள் 2 இல் இருந்து 200ஆக அதிகரித்துள்ளது. உலகின் மாபெரும் மொபைல் உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது. உலகிலேயே மலிவான மொபைல் டேட்டா கட்டணம் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 5ஜி சேவை என்பது தற்சார்பு இந்தியாவின் மைல்கல்’ என்றார் பிரதமர் மோடி.

இதையும் படிங்க: Actor siddharth: புதிய தொழில் தொடங்கும் சித்தார்த்