Union Budget 2023: குடியரசு தலைவர் உரையுடன் பட்ஜெட் தொடர் துவக்கம்

புதுடெல்லி: Inauguration of Budget Series with President’s Speech. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்கியது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றி வருகிறார். இரு அவைகளின் கூட்டு கூட்டம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இதில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு உரை ஆற்றி வருகிறார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 25-ந் தேதி குடியரசு தலைவர் பதவி ஏற்றுக்கொண்ட பின்னர், நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரை ஆற்றுவது இதுவே முதல் முறை ஆகும். பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் இது நடைபெறும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.

முதல் நாளில் பொருளாதார ஆய்வறிக்கையை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்த அறிக்கை 2022-23 முழு நிதி ஆண்டுக்கான இந்திய பொருளாதாரத்தின் நிலையையும், நிதி வளர்ச்சி, பண மேலாண்மை மற்றும் வெளித்துறைகள் உள்ளிட்ட எதிர்கால கண்ணோட்டத்தையும் மதிப்பாய்வு செய்கிறது. நாளை தனது 5-வது நிதி நிலை அறிக்கையை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

2023 பட்ஜெட் கூட்டத்தொடரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பங்கேற்றுள்ளனர். மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரை ஆம் ஆத்மி கட்சி புறக்கணித்துள்ளது. முன்னதாக நாடாளுமன்ற அவைக்கு வந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.