Election King Padmarajan Contest: ஈரோடு இடைத்தேர்தல்: தேர்தல் மன்னன் பத்மராஜன் போட்டி

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 233வது (Election King Padmarajan Contest) முறையாக போட்டியிடுவதற்கு தேர்தல் மன்னன் பத்மராஜன் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கின்றார்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4ம் தேதி மாரடைப்பால் காலமானார். அவரது மறைவை தொடர்ந்து பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்பட இருக்கின்றார். நாம் தமிழர் சார்பில் மேனகா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை இன்று முதல் தினமும் காலை 10 மணி தொடங்கி பிற்பகல் 3 மணி வரை தாக்கல் செய்யலாம். வேட்பு மனு தாக்கல் செய்ய பிப்ரவரி மாதம் 7ம் தேதி கடைசி நாளாகும்.

இந்நிலையில், சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த தேர்தல் மன்னன் என அழக்கப்படும் பத்மராஜன் என்பவர் 233 வது முறையாக தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் உள்ளாட்சி முதல் பாராளுமன்றம், ஜனாதிபதி உள்ளிட்ட தேர்தல்களில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.