Co-operative Societies link on e-market website: இ-மார்க்கெட் பிளேஸ் இணையத்தில் கூட்டுறவு சங்கங்கள்: அமித்ஷா தொடங்கி வைப்பு

புதுடெல்லி: Co-operative Societies link on e-market website: கூட்டுறவு சங்கங்களை அரசு இ-மார்க்கெட்பிளேஸ் (GeM) இணையதளத்தில் இணைக்கும் நிகழ்ச்சியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.

புதுடெல்லியில் இன்று கூட்டுறவு சங்கங்களை அரசு இ-மார்க்கெட்பிளேஸ் (ஜிஇஎம் ) இணையதளத்தில் இணைக்கும் நிகழ்ச்சியை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுதுறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். மத்திய அரசின் கூட்டுறவு அமைச்சகம், இந்திய தேசிய கூட்டுறவு ஒன்றியம் மற்றும் ஜிஇஎம் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ்கோயல், மத்திய கூட்டுறவு மற்றும் வடகிழக்கு மண்டல மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் பி.எல்.வர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அமித் ஷா, இந்திய வரலாற்றில் இன்று மிக முக்கியமான நாள். 1942 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 9 ஆம் தேதி, காந்தியடிகள் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடங்கினார். இன்று ஆகஸ்ட் 9ம் தேதி விடுதலையின் அமிர்தப் பெருவிழா நிகழ்வில் மற்றொரு முக்கியமான பணி நடைபெறுகிறது. இதில் நாட்டிலுள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு ஜிஇஎம் அணுகல் வழங்கப்பட்டது. கூட்டுறவுத் துறையில் அபரிமிதமான ஆற்றல்கள் இருப்பதாகவும், இந்தத் துறையின் விரிவாக்கத்திற்கு ஜிஇஎம் மிகவும் பயனுள்ள தளமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும் அரசாங்கத்தின் பெரும்பாலான அலகுகள் ஜிஇஎம் மூலம் வாங்குகின்றன. எனவே கூட்டுறவு நிறுவனங்களும் தங்கள் சந்தையை அதிகரிக்க ஜிஇஎம்மில் சப்ளை செய்யப் பதிவு செய்யத் தயாராக வேண்டும் என்று மத்திய அமைச்சர் கூறினார். இந்திய தேசிய கூட்டுறவு ஒன்றியம் கூட்டுறவுகளின் சந்தைப்படுத்தலை விரிவுபடுத்த வேண்டும் என்றும், இதற்கு ஜிஇஎம்- ஐ விட சிறந்த வழி இருக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

சுதந்திரத்திற்குப் பிறகு புறக்கணிக்கப்பட்டிருந்த இந்தத் துறையின் விரிவாக்கத்தை, பிரதமர் நரேந்திர மோடியின் வரலாற்றுச் சீர்திருத்தங்கள் மற்றும் நவீனமயமாக்கல் மூலம் துரிதப்படுத்துகிறார். மோடியின் தலைமையின் கீழ், கூட்டுறவு அமைச்சகம் விரிவாக்கத்திற்கான பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

கூட்டுறவு சங்கங்களை விரிவுபடுத்த அமைச்சகம் பல்வேறு வகையான கூட்டுறவுகளின் தேசிய அளவிலான தரவுத்தளத்தையும் உருவாக்குகிறது. பயிற்சிக்கான ஏற்பாடுகளும் செய்யப்படும். ஒரு ஏற்றுமதி நிறுவனமும் பதிவு செய்யப்பட்டு வருகிறது, அதற்கான பணிகள் டிசம்பரில் முடிவடையும் என்று திரு ஷா கூறினார்.

நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் இருந்து ஏற்றுமதி செய்வதற்கான தளத்தை இது வழங்கும். பல மாநில கூட்டுறவுச் சட்டத்திலும் தீவிர மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாகவும், திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் அனைத்து பிஏசிஎஸ்களையும் கணினிமயமாக்க முடிவு செய்துள்ளதாகவும் அமித்ஷா கூறினார்.