Corona Test: வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை கட்டாயம்: மத்திய அரசு அதிரடி உத்தரவு

கொரோனா பெருந்தொற்றை (Corona Test) கட்டுப்படுத்துவதற்காக அனைத்து விமான நிலையங்களிலும் பயணிகளுக்கு பரிசோதனை கட்டாயப்படுத்தியுள்ளது மத்திய அரசு.

கடந்த 2019ம் ஆண்டு கொரோனா என்ற கொடிய வைரஸ் சீனாவில் உருவாகி உலகம் முழுவதும் சிறிது காலங்களிலேயே பரவியது. இதனால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இடம் இன்றி சாலையிலும், தெருவிலும் படுத்துக்கொண்டு சிகிச்சை பெற்றதையும் பார்த்திருப்போம். பலர் உயிரிழந்த நிலையில் அவர்களின் சடலங்களை எரிப்பதற்காக கிலோ மீட்டர் கணக்கில் கியுவில் இருந்தததை பார்த்த மக்கள் கண்ணீர் வடித்தனர்.

இந்த கொடிய வைரஸ் நோயை கட்டுப்படுத்த இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தடுப்பூசியை வெற்றிகரமாக கண்டுப்பிடித்து மக்களுக்கு செலுத்தி உயிர்களை காப்பாற்றினர். இதனால் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா பெருந்தொற்று அழிந்து உலகம் முழுவதும் இயல்பு நிலைக்கு திரும்பியது.

இந்நிலையில், மீண்டும் சீனாவில் உருமாறிய நிலையில் புதிய வகை வைரஸ் உருவாகியிருப்பது உலக நாட்டு மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதனால் சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.

அதே போன்று இந்தியாவிலும் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது: சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆங்காங், தாய்லாந்து உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து வருகின்ற அனைத்து பயணிகளுக்கும் கட்டாயமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அறிகுறிகள் தென்பட்டால் அவரை தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.