Karti Chidambaram: கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை கைது செய்தது சிபிஐ

karti chidambaram
கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை கைது செய்தது சிபிஐ

Karti Chidambaram: கடந்த 2009-2014ஆம் ஆண்டில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது சீனாவைச் சேர்ந்த 263 பேருக்கு விசா வழங்கியதில் 50 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் வீடு உட்பட 10 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

கடந்த 2009-2014-ல் ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது பஞ்சாப் மாநிலத்தில் தால்வாண்டி சாபோ மின்திட்டம் செயல்படுத்தப்பட்டது. பஞ்சாபின் மான்சா நகரில் அமைக்கப்பட்ட இந்த 1,980 மெகாவாட் திறனுடைய மின்திட்டமானது, சீனாவைச் சேர்ந்த ஷான்டாங் எலெக்ட்ரிக் பவர் கன்ஸ்டிரக்சன் கார்ப் என்ற நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், அங்கே, மின் திட்டத்தைக் செயல்படுத்த தாமதம் ஏற்பட்டது. இதனால் சீனாவிலிருந்து சீன தொழில்நுட்ப நிபுணர்களை கொண்டுவர அந்த நிறுவனம் முயற்சித்தது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் விதித்த உச்ச வரம்புக்கு மேல் விசாக்கள் தேவைப்பட்டன. எனவே, சம்பந்தப்பட்ட சீன நிறுவனம் கார்த்தி சிதம்பரத்தை அவரது நெருங்கிய கூட்டாளிகள் மூலம் அணுகியதாகக் சொல்லப்படுகிறது. இதையடுத்து அரசு விதிகளை மீறி சீன நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு 263 விசாக்கள் ஒதுக்கப்பட்டதாகவும், இதற்காக 50 லட்சம் ரூபாய் லஞ்சமாகத் தரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட 10 இடங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. அதன்படி சென்னையில் 3 இடங்களிலும் மும்பையில் 2 இடங்களிலும், டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் வீடு, அலுவலகத்திலும் கர்நாடகா, பஞ்சாப், ஒடிசா ஆகிய மாநிலங்களில் தலா 1 இடங்கள் என மொத்தம் 10 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனை நடத்துவது குறித்து தமது டிவிட்டர் பக்கத்தில், ப.சிதம்பரம் வெளியிட்ட பதிவில், “சென்னை, டெல்லியில் உள்ள எனது வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தி உள்ளனர். காலை முதல் நடந்து வரும் சோதனையில் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. அவர்களால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. சிபிஐ தரப்பில் என்னிடம் காண்பிக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் (எப்ஐஆர்) எனது பெயர் குற்றவாளி என்று குறிப்பிடப்படவில்லை. சிபிஐ சோதனை நடத்தி வரும் இந்த தருணம் சுவாரஸ்யமானது” என்று பதிவிட்டிருந்தார். இதேபோல், கார்த்தி சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில், “எத்தனை முறைதான் சோதனை நடத்துவீர்கள், எத்தனை முறை சோதனை நடந்தது என்பதை நானே மறந்துவிட்டேன்” என்று பதிவிட்டிருந்தார்.

இதையும் படிங்க: Perarivalan case: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை