Applications invited NIP, WIPO Awards: உலக, தேசிய அறிவுசார் சொத்து விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை: Applications invited for National Intellectual Property (IP), WIPO Awards: தேசிய அறிவுசார் சொத்து விருதுகள் 2021, 2022 மற்றும் உலக அறிவுசார் சொத்து அமைப்பு விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவுசார் சொத்துரிமை (புலமைச் சொத்து) என்பது பாட்டு, கதை, கட்டுரை, ஓவியம், படங்கள், கண்டுபிடிப்புகள், நுட்பங்கள், வணிகச் சின்னங்கள் போன்ற ஆக்கபூர்வமான படைப்புக்களின் உரிமை பற்றியதாகும். பொதுவாக படைப்பாளிக்கு அல்லது படைப்பை ஆக்கும் நிறுவனத்துக்கு அந்த படைப்பின் சொத்துரிமை சேரும்.

ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு சொத்துரிமை உள்ளோரின் அனுமதி இன்றி இவற்றை பிறர் பயன்படுத்த முடியாது. பொதுவாக உலக அளவில் அங்கீகரிக்கப்படும் அறிவுசார் சொத்துரிமைகளில் பதிப்புரிமை, வணிகச் சின்னம், படைப்புரிமம், புவிசார் குறியீடு, வணிக ரகசியம் ஆகியவையும் அடங்கும். பல நூற்றாண்டுகளாகவே இதன் கொள்கைகள் வளர்ச்சியில் இருந்தாலும் 19ம் நூற்ற்னடுக்கு பின்னரே அவை வெளிப்படையாக அங்கீகரிக்கப்பட்டு “அறிவுசார் சொத்துரிமை” என்ற பெயரும் வழங்கப்பட்டது. மேலும் 20ம் நூற்றாண்டில் தான் உலக அளவில் இதன் உபயோகம் பெரும் அளவில்; வளர்ச்சி அடைய தொடங்கியது.

புவிசார் குறியீடுகளும் இந்த சொத்துரிமையின் கீழ் வருவன. இந்தியாவில் மதுரை மல்லி, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, திருப்பதி லட்டு போன்றவை புவிசார் குறியீட்டினைப் பெற்றுள்ளன.

இந்நிலையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், அறிவுசார் சொத்து உருவாக்கம், அதன் வணிக மயம் ஆகியவற்றிற்கு தனிநபர்கள், நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், எம்எஸ்எம்இக்கள், புதிய தொழில்கள் மற்றும் அமைப்புகளின் பங்களிப்பை அங்கீகரித்தும் அறிவுசார் சொத்து சட்டங்கள் அமலாக்கத்தை தீவிரமாக உறுதிப்படுத்தி ஆரோக்கியமான அறிவுசார் சொத்து சூழலை உருவாக்கும் சட்ட அமலாக்க முகமையை அங்கீகரித்தும் தேசிய அறிவுசார் சொத்து விருதுகள் வழங்கப்படுகின்றன.

காப்புரிமை பதிவு செய்தல், வணிகமய அறிமுகம் ஆகியவற்றில் முதன்மை வகிக்கும் இந்தியாவின் தனிநபர்கள், (18 வயதும் அதற்கு மேல் உள்ளவர்களும்) 3-ம் பாலினத்தவர், முதன்மை வகிக்கும் கல்விசார் நிறுவனங்கள், முதன்மை வகிக்கும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புகள், முதன்மை வகிக்கும் பொது நிறுவனங்கள்/ தனியார் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதேபோல், பொருள் உற்பத்தித் துறையில் இந்தியாவின் தனியார் நிறுவனம், புதிய தொழில் நிறுவனங்கள் போன்றவையும் அறிவுசார் சொத்து சட்டத்தை அமலாக்கும் சிறந்த காவல் பிரிவு (மாவட்டம் / மண்டல ஆணையரகம்) ஆகியவையும் விண்ணப்பங்களை அனுப்பலாம். https://ipindia.gov.in/newsdetail.htm?816/ என்ற இணையதளத்தில் கிடைக்கும் விண்ணப்பங்களை தேவைப்படும் விவரங்களுடன் பூர்த்தி செய்து 31.08.2022 அன்று அல்லது அதற்கு முன்பாக விண்ணப்பங்கள் [email protected] என்ற மின்னஞ்சலில் அனுப்பப்பட வேண்டும்.

தபாலில் அனுப்புவோர் டாக்டர் சுனிதா பெட்கெரி, காப்புரிமை மற்றும் வடிவமைப்புகளுக்கான உதவி கட்டுப்பாட்டாளர், பௌதிக் சம்பட பவன், எஸ் எம் சாலை, அன்டாப் ஹில் மும்பை-400 037 (தொலைபேசி எண்: 022 – 2414 4127) என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

கடந்த 2009ம் ஆண்டிலிருந்து வழங்கப்படும் இந்த விருது, ரூ.1 லட்சம் பரிசுத்தொகையையும், பாராட்டுப் பத்திரத்தையும் கொண்டதாகும். இந்த விருதுகள் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் பிறந்தநாளான அக்டோபர் 15, 2022 அன்று வழங்கப்படும்.