Aiadmk General Committee Case: அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு ஜனவரி 10ம் தேதி ஒத்திவைப்பு

சென்னை: அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் (Aiadmk General Committee Case) கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடந்தது. அப்போது கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். அவருடன் சேர்ந்து வைத்திலிங்கம் மற்றும் சில எம்.எல்.ஏக்கள் நீக்கப்பட்டனர்.

இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தபோது அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மேல் முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் பி.வைரமுத்து ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த 4ம் தேதி தொடங்கிய நிலையில் இன்று 3வது நாளாக நடைபெற்றது. இதில், தலைமை கழக நிர்வாகிகளுக்கு பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் இல்லை. கட்சியின் தலைவர் அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்வு செய்யப்பட வேண்டும் என எம்ஜிஆர் விதிகளை உருவாக்கியுள்ளார். அதை யாராலும் மாற்ற இயலாது. இரட்டை தலைமை காலாவதியாகவில்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொது குழுவை கூட்ட முடியும் என்று ஓபிஎஸ் தரப்பில் வாதமாக வைக்கப்பட்டது.

இந்நிலையில், இரண்டு தரப்பின் வாதங்களை கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிமுக பொதுக்குழு தொடர்புடைய மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணையை வருகின்ற ஜனவரி 10ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.