Murder in Maharashtra : நூபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக ஒரு பதிவைப் பகிர்ந்ததற்காக மகாராஷ்டிராவில் ராஜஸ்தான் பாணியில் கொலை

Maharashtra : அமராவதி வேதியியலாளர் உமேஷ் கோல்ஹே ஜூன் 21-ஆம் தேதி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா: Murder in Maharashtra : கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பாஜக தலைவர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டதால், மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் ராஜஸ்தான் பாணியில் கொலை நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் 54 வயது வேதியியலாளர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அமராவதி வேதியியலாளர் உமேஷ் கோல்ஹே கடந்த ஜூன் 21-ஆம் தேதிய‌ன்று கத்தியால் குத்தி கொலை செய்ய‌ப்பட்டார். ராஜஸ்தான் மாநிலத்தில் கன்ன‌யலால் இரண்டு ஆசாமிகளால் குத்திக் கொல்லப்பட்டதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.

உமேஷ் கோல்ஹே கொலை வழக்கை விசாரிக்கக் கோரி உள்ளூர் பாஜக தலைவர்கள் காவல்துறையிடம் கடிதம் அளித்துள்ளனர். பழிவாங்கவும், சமூகத்திற்கு முன்னுதாரணமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த கொலை நடந்துள்ளது என்று குற்றம் சாட்டினர். பாஜக தலைவர்களில் ஒருவரிடமிருந்து எங்களுக்கு ஒரு கடிதம் வந்துள்ளது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அமராவதி நகரில் உமேஷ் கோல்ஹே மருத்துக் கடை நடத்தி வந்துள்ளார். அவர் நூபுர் ஷர்மாவிற்கு ஆதரவாக கட்செவியில் சில பதிவுகளைப் பகிர்ந்துள்ளார். முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் ஒரு குழுவிற்கும் உமேஷ் கோல்ஹே இந்த பதிவுகளைப் பகிர்ந்துள்ளார் என்று சிட்டி கோட்வாலி காவல் நிலைய அதிகாரி தெரிவித்தார்.

இது தொடர்பாக அமராவதிக்கு தேசிய புலனாய்வு நிறுவனம் வந்து விசாரணை மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மகாராஷ்டிரா போலீஸாரிடம் தகவல் சேகரித்து வரும் தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள், இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமராவதியில் உமேஷ் கோல்ஹே படுகொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு நிறுவன‌ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த கொலையின் பின்னணியில் உள்ள சதி, அமைப்புகளின் தொடர்பு மற்றும் சர்வதேச தொடர்புகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று உள்துறை அமைச்சகம் சுட்டுரையில் தெரிவித்துள்ளது.