10 month old baby : 10 மாதக் குழந்தைக்கு முதன்முறையாக ரயில்வேயில் வேலைக்கு உறுதி

சத்தீஸ்கர் : 10 month old baby assured job in the railways : பெற்றோர் அரசுப் பணியில் இருக்கும் போது, எதிர்பாராத விதமாக உயிரிழக்க நேரிட்டால், கருணை அடிப்படையில் அவர்களது வாரிசுக்கு பணி வழங்கும் முறை இந்தியாவில் நடைமுறையில் உள்ளது.

சம்பந்தப்பட்ட வாரிசுகள் 18 வயது பூர்த்தியாகாதவர்களாக இருக்கும்பட்சத்தில், அவர்கள் தகுதியான வயதை அடைந்தவுடன் அவர்களுக்கு, அவர்களின் கல்வித்தகுதியின் அடிப்படையில் பணி வழங்கப்படும்.

ஆனால், இந்திய ரயில்வே துறை வரலாற்றில் முதன்முறையாக 10 மாத குழந்தைக்கு (10 month old baby assured job) கருணை அடிப்படையில் வேலை வழங்கப்பட்டிருப்பது ஆச்சர்யத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்ப்பூர் ரயில்வே மண்டலத்தில் (Raipur Railway Zone) பிலாய் ரயில்வே யார்டில் பணி புரிந்து வந்தவர் ராஜேந்திர குமார் யாதவ். இந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது நடந்த சாலை விபத்தில், ராஜேந்திர குமாரும், அவரது மனைவி மஞ்சுவும் நிகழ்விட‌த்திலேயே உயிரிழந்தனர்.

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் அவர்களது 10 மாதப் பெண் குழந்தை ராதிகா மட்டும் உயிர் பிழைத்தது. அதைத் தொடர்ந்து, குழந்தை ராதிகாவை அவரது பாட்டி பராமரித்து வருகிறார்.

ரயில்வே துறை விதிகள் படி (As per Railway Department Rules), தங்கள் ஊழியரின் குழந்தைக்கு எதிர்காலத்தில் பாதுகாப்பு, உதவி மற்றும் வேலை தேவை என்பதை நன்றாக அறிந்திருந்தது ராய்ப்பூர் ரயில்வே மண்டலம். எனவே, அந்த பத்து மாதக் குழந்தைக்கு வேலை வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி,பெற்றோரை இழந்த அந்த பச்சிளங் குழந்தையின் கைவிரல் ரேகையை முறைப்படி பதிவுசெய்து வேலைக்காகப் பதிவிட்டது. சம்பந்தப்பட்டக் குழந்தை வளர்ந்து 18 வயது நிறைவடையும்போது ரயில்வே துறை சார்பில் அவருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, ராய்பூர் ரயில்வே அதிகாரிகள் கூறுகையில்,“இந்திய ரயில்வே வரலாற்றில் இதுவரை நடக்காத ஒரு காரியத்தை நாங்கள் செய்திருக்கிறோம். 10 மாதக் குழந்தைக்கு வேலையை உறுதி செய்திருப்பது இதுதான் முதன்முறை. அந்தக் குழந்தையின் கைவிரல் ரேகையை எடுக்கும்போது குழந்தை அழுதது உணர்ச்சிகர‌மாக இருந்தது.

நாங்கள் அனைத்து உதவிகளையும் ராஜேந்திர குமாருக்காகச் செய்தாலும், ரயில்வே விதிகளை மீறவில்லை. அந்தப் பெண் குழந்தை வளர்ந்து 18 வயதை எட்டியபின் (After attaining 18 years of age), ரயில்வே சார்பில் வேலை வழங்குவது உறுதியாகும். அதன் பின்னர், ரயில்வே துறையில் உள்ள சலுகைகள் அவருக்கு வழங்கப்படும்,” எனத் தெரிவித்தனர்.

10 மாதக் குழந்தைக்கு கருணை அடிப்படையில் இப்போதே வேலை உறுதி செய்யப்பட்டிருப்பது தேசிய அளவில் பாராட்டுதலை பெற்றுள்ளது. மக்களை நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.