Corona free booster dose : இன்று முதல் 18 வயது மேற்பட்டவர்களுக்கு கட்டணமின்றி கரோனா பூஸ்டர் தடுப்பூசி

தில்லி: Above 18 years free booster dose : தேசிய அளவில் இன்று முதல் 18 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு கட்டணமின்றி கரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

மத்திய அரசு மேற்கொண்டு வரும் இந்தியாவின் 75-வது சுதந்திர தின தொடர் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக முன்னெச்சரிக்கை (பூஸ்டர் ) தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக இந்த 75 நாள்கள் (75 days) சிறப்பு இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

இது குறித்து தனது சுட்டுரையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பதிவிட்டுள்ளதாவது: 18 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு (Above 18 years) ஜூலை 15-ஆம் தேதி முதல் அடுத்த 75 நாள்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி கட்டணமின்றி செலுத்தப்பட உள்ளது. இந்த முடிவை எடுத்த பிரதமர் மோடிக்கும் நன்றி. இதனால் கரோனாவிற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையை மேலும் வலுபடுத்தும். எனவே தகுதி உள்ள அனைவரும் கரோனா முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஒட்டுமொத்தமாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 199.12 கோடியைத் தாண்டியுள்ளது. ஜூலை 13 ஆம் தேதி நிலவரப்படி 12-14 வயதுக்குட்பட்டவர்களுக்கு 3.76 கோடி முதல் கரோனா தடுப்பூசிகள் (Corona vaccines) செலுத்த‌ப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அரசாங்க தரவுகளின்படி, இந்தியாவின் மக்கள்தொகையில் 96 சதம் பேருக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்த‌ப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 87 சதம் பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இந்த ஆண்டு ஏப். 10-ஆம் தேதி முதல், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் செலுத்திக் கொள்ள‌ கரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (National Technical Advisory Committee) பரிந்துரைக்குப் பிறகு, அண்மையில் 2-வது மற்றும் முன்னெச்சரிக்கை கரோனா தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ளும் இடைவெளி 9 மாதங்களிலிருந்து 6 மாதமாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வேகத்தை விரைவுபடுத்துவதற்கும், முன்னெச்சரிக்கை தடுப்பூசியை செலுத்திக் கொள்வதை ஊக்குவிப்பதற்காகவும், அரசு ஜூன் 1-ஆம் தேதி முதல் 2-வது தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் திட்டத்தை தொடங்கி உள்ள‌து. நாடு தழுவிய கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் திட்டம் 2021-ஆம் ஆண்டு ஜன. 16-ஆம் தேதி தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு (healthcare workers) தடுப்பூசி செலுத்த‌ப்பட்டது. அதன் பின்னர் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்வதை அதே ஆண்டு பிப். 2-ஆம் தேதி தொடங்கப்பட்டது.