SSC Stenographer Grade-C &D Exam: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் சுருக்கெழுத்தாளர் ‘சி’ மற்றும் ‘டி’ நிலைத் தேர்வு அறிவிப்பு

புதுடெல்லி: STAFF SELECTION COMMISSION STENOGRAPHER GRADE ‘C’ & ‘D’ EXAMINATION: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் சுருக்கெழுத்தாளர் ‘சி’ மற்றும் ‘டி’ நிலைத் தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தென்மண்டல இயக்குநர் கே. நாகராஜா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், சுருக்கெழுத்தாளர் ‘சி’ மற்றும் ‘டி’ நிலைத் தேர்வுக்கான‌ அறிவிக்கையை கடந்த 20ம் தேதி வெளியிட்டது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், நிறுவனங்களில் சுருக்கெழுத்தாளர் ‘சி’ மற்றும் ‘டி’ நிலைகளுக்கு பணியாளர்களை அமர்த்துவதற்கான தேர்வை ஆணையம், கணினி வாயிலாக வெளிப்படையான முறையில் தேர்வு நடத்தும். சுருக்கெழுத்தில் திறமை வாய்ந்தவர்கள் மட்டுமே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெறுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

(அ) செலுத்த வேண்டிய கட்டணம்: ரூ 100/-, (ஆ) பெண் மற்றும் அட்டவணைப்படுத்தப்பட்ட விண்ணப்பதாரர்கள், இடஒதுக்கீட்டிற்கு தகுதியான வகுப்பினர் (SC), பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST), ஊனமுற்ற நபர்கள் (PwD) மற்றும் முன்னாள் ராணுவத்தினர் (ESM) கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. (இ) BHIM UPI, நெட் பேங்கிங் மூலமாகவோ அல்லது விசா, மாஸ்டர்கார்டு, மேஸ்ட்ரோ, ரூபே கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தியோ அல்லது எஸ்பிஐ கிளைகளில் எஸ்பிஐ சலானை உருவாக்கி பணமாகவோ செலுத்தலாம்.

பணி சம்பந்தமான விவரங்கள், வயதுவரம்பு, அடிப்படைக் கல்வி தகுதி, தேர்வு விவரங்கள், எவ்வாறு விண்ணப்பிப்பது போன்ற தகவல்கள் Notification அறிவிக்கையில் இடம்பெற்றுள்ளன.

ssc.nic.in என்ற ஆணையத்தின் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். 05.09.2022 (இரவு 11 மணி) வரை இணைய வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இணைய வழியாக தேர்வு கட்டணத்தை செலுத்துவதற்கான கடைசி தேதி 06.09.2022 (இரவு 11 மணி). இணைய வழி விண்ணப்பப் படிவத்தில் ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படம் மற்றும் கையெழுத்தை விண்ணப்பதாரர் பதிவேற்றம் செய்ய வேண்டும். புகைப்படத்தில் விண்ணப்பதாரர் தொப்பி மற்றும் கண்ணாடி அணிந்திருக்கக் கூடாது.

தென் மண்டலத்தில், தமிழகத்தில் 5 மையங்களிலும், புதுச்சேரியில் ஒரு மையத்திலும், ஆந்திர பிரதேசத்தில் 6 மையங்களிலும், தெலுங்கானாவில் 2 மையங்களிலுமாக மொத்தம் 14 மையங்கள்/ நகரங்களில் 2022, நவம்பர் மாதத்தில் கணினி அடிப்படையில் தேர்வு நடைபெறும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தென்மண்டல இயக்குநர் கே. நாகராஜா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.